2014-07-17 13:37:09

புனிதரும் மனிதரே : காற்றில் மிதந்தவர்(St. Joseph of Cupertino)


ஜூலை 18,2014. தென் இத்தாலியின் குப்பர்த்தினோ என்ற கிராமத்தைச் சார்ந்த சிறுவன் ஜோசப், சிறு வயதிலேயே காட்சிகள் கண்டு பரவசமடைவார். எதையும் மிகவும் மெதுவாகச் செய்பவராக, மறதியுள்ள சிறுவனாக இருந்தார். அவரது வாய் எப்பொழுதும் திறந்தபடியே இருக்கும். அதேசமயம் கடும் முன்கோபியாகவும் இருந்தார். இவர் தனது தாயின் கர்ப்பத்தில் வளர்ந்தபோதே தந்தையை இழந்தார். இவரது தந்தை விட்டுச்சென்ற பெரும் கடனுக்காக இவரது வீட்டை கடன்கொடுத்தவர்கள் எடுத்துக்கொண்டனர். இதனால் இவரை மாட்டுத் தொழுவத்தில்தான் தாய் பெற்றெடுத்தார். வறுமை ஒருபுறம், ஜோசப்பின் மந்தமான நடத்தைகள் மறுபுரம். இதனால் இவனது தாய் இவர் தொந்தரவாக இருக்கிறார் என்று மிகவும் கடுமையாக நடத்தினார். ஜோசப் தனது மாமாவுடன் சேர்ந்து செருப்புத் தைத்தார். துறவியாக வேண்டுமென்று ஆவல்கொண்டு தனது 17வது வயதில், 1620ம் ஆண்டில் பிரான்சிஸ்கன் சபைக்கு விண்ணப்பித்தார். படிப்பறிவு இல்லாததால் அச்சபையினர் ஜோசப்பை ஏற்கவில்லை. பின்னர் அதே ஆண்டில் கப்புச்சின் சபையில் அருள்சகோதரராக ஏற்றுக்கொள்ளப்பட்டார் ஜோசப். ஆனால் அடிக்கடி காட்சிகள் கண்டு பரவசமடைந்ததால், அடிக்கடி சாப்பாடு தட்டுகளை கீழே போடுவார். தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளையும் மறந்துவிடுவார். அதனால் அங்கிருந்தும் நீக்கப்பட்டார். 18 வயதில் தனது மகன் இப்படி இருப்பது கண்டு தாய் வேதனைப்பட்டார். பின்னர் குப்பர்த்தினோவிலிருந்த பிரான்சிஸ்கன் சபையினர் ஜோசப்பைச் சேர்த்துக்கொண்டனர். அங்கு குதிரைகளைக் கவனிக்கும் கடினமான வேலைகள் அவருக்குக் கொடுக்கப்பட்டன. அச்சமயத்தில் ஜோசப்பின் வாழ்வு மாறத் தொடங்கியது. மிகவும் தாழ்மையுடன் தனது வேலைகளைக் கவனமுடன் செய்யத் தொடங்கினார். பின்னர் அச்சபையில் குருவானார். வாழ்வில் 35 ஆண்டுகள் வாரத்துக்கு இரு தடவைகள் மட்டுமே கெட்டியான உணவு உண்டு நிறையத் தவங்கள் செய்தார். இவர் திருப்பலி நிறைவேற்றும்போதும், செபிக்கும்போதும் தரையிலிருந்து மேலே இருப்பதை எழுபது தடவைகளுக்கு அதிகமாக மக்கள் பார்த்துள்ளனர். ஒரு சமயம் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடப்பட்டபோது பீடத்தின் உச்சிக்குப் பறந்து காற்றில் முழங்காலிட்டு செபத்தில் ஆழ்ந்திருந்தார். அடிக்கடி காட்சிகண்டு அப்படியே அந்தரத்தில் தொங்கி முழுவதும் இறைவனோடு ஒன்றித்துப் பேசிக்கொண்டிருப்பார். தூய்மையில் வளர்ந்த இவர் காண்கின்ற அனைத்திலும் இறைவனைக் கண்டார். தரைக்கு மேலே மிதப்பது பேயின் வேலை என்று சொல்லி இவரைச் சபைத் தலைவர்கள் இடம்விட்டு இடம் மாற்றினர். இவ்வாறு புனிதாரக வாழ்ந்த குப்பர்த்தினோ நகர் புனித ஜோசப், 1663ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தனது 60வது வயதில் காலமானார். 1767ம் ஆண்டு திருத்தந்தை 13ம் கிளமென்ட் இவரைப் புனிதராக உயர்த்தினார். குப்பர்த்தினோ நகர் புனித ஜோசப் விமான ஓட்டுனர்கள் மற்றும் விமானப் பயணிகளுக்குப் பாதுகாவலர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.