2014-12-08 15:18:13

திருத்தந்தை : அன்னை மரியாவைப் போல் இறை விருப்பத்திற்கு நம்மையே கையளிக்க வேண்டும்


டிச.08,2014. அனைத்தும் அருள் நிறைந்தவை, அனைத்தும் இறை அன்பின் சுதந்திரக் கொடைகள் என்பதை, அமல உற்பவ அன்னையின் திருவிழா நமக்கு நினைவுறுத்துகிறது என்று, டிசம்பர் 8, இத்திங்களன்று, இத்திருவிழாவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார்.
வானதூதர் கபிரியேல், 'அருள் நிறைந்தவரே' என்று அழைத்து, கூறிய வார்த்தைகளைக் கேட்ட அன்னை மரியா, 'நீர் கூறியபடியே நான் செய்கிறேன்' என்று கூறவில்லை; மாறாக, 'உம் வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று கூறி, தன்னை முழுமையாக இறைவனிடம் கையளித்தார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாமும் அன்னை மரியாவைப் போல் இறை விருப்பத்திற்கு நம்மையே கையளிக்க வேண்டும் என்று கூறினார்.
அன்னை மரியா, சென்மப் பாவமற்றவராகப் பிறந்து, இறைமகனைத் தாங்க, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அதேபோல், நாம் அனைவரும் திருமுழுக்கு மற்றும் விசுவாசம் வழியே மீட்கப்பட்டுள்ளோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இலவசமாகப் பெற்றுக்கொண்ட நாம், இலவசமாக வழங்கவே அழைப்பு பெற்றுள்ளோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரை ஏற்றுக்கொள்வது, ஒப்புரவு மற்றும் மன்னிப்பின் கருவிகளாக செயல்பட, தூய ஆவியார் தன் கொடைகளை நமக்கு வழங்கியுள்ளார் என்று மேலும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.