2015-02-23 15:06:00

கடுகு சிறுத்தாலும்–பிறருக்காக வாழ்வதில் சக்தி பிறக்கிறது


புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா அவர்கள் ஒரு முறை, படுக்கையைவிட்டு எழுந்திருக்க முடியாத அளவுக்கு இதய வலியால் துடித்தார். அதனால் மருத்துவரை தனது வீட்டுக்கு வருமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் மருத்துவரோ, அவரை, தனது மருத்துவமனைக்கு வரச் சொன்னார். டாக்டர், என்னால் கை கால்களை அசைக்கக்கூட முடியவில்லை, அதனால் தயவுசெய்து எனது வீட்டுக்கு நீங்கள் வாருங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார் பெர்னார்ட் ஷா. சரி வருகிறேன் என்று சலிப்புடன் சொல்லி பெர்னார்ட் ஷாவின் வீட்டுக்குச் சென்றார் மருத்துவர். எழுந்து கதவைத் திறக்க முடியாது என்பதால் கதவைத் தாளிடாமலே படுத்திருந்தார் பெர்னார்ட் ஷா. சிறிதுநேரம் சென்று கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்தார் மருத்துவர். உடனடியாக அங்கிருந்த சோபாவில் சாய்ந்த மருத்துவர், இங்கு லிஃப்ட் வேலை செய்யவில்லை, இத்தனை மாடி ஏறி வந்ததால் எனது இதயம் படபடவெனத் துடிக்கிறது, மயக்கம் வருகிறது என்று, வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டே சொன்னார். அவரைப் பார்த்த பெர்னார்ட் ஷா பதறிப்போய், எதுவும் அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்று பயந்து, படுக்கையைவிட்டு எழுந்து குடிப்பதற்குச் சூடாக காப்பி தயாரித்தார். பரபரவென ஆஸ்பிரின் மாத்திரைகளைத் தேடி எடுத்து மருத்துவருக்குக் கொடுத்தார். இதில் உற்சாகமான மருத்துவர் ஒரு தாளை எடுத்து பெர்னார்ட் ஷாவிடம் நீட்டினார். அதைப் பார்த்த ஷா புருவங்களை உயர்த்தினார். ஒன்றுமில்லை உங்களை நான் குணமாக்கியதற்குக் கட்டணம் என்றார் மருத்துவர். இது எப்படி இருக்கு, டாக்டர், சொல்லப்போனால் நீங்கள்தான் எனக்குக் கட்டணம் செலுத்த வேண்டும், ஏனெனில் நான்தான் உங்களைக் குணமாக்கினேன் என்றார் ஷா. அதற்கு மருத்துவர், இல்லை இல்லை, கை கால்களைக்கூட அசைக்க முடியாமல் படுத்துக்கிடந்த உங்களை எழுந்து காப்பி போட வைத்து உங்களைக் குணமாக்கிவிட்டேன் அல்லவா, அதனால் எடுங்கள் கட்டணப் பணத்தை என்றார் மருத்துவர் கறாராக.

பிறர் துன்பம் துடைக்க, தன் துன்பம் மறைகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.