2015-03-31 16:49:00

விவசாயிகளின் தற்கொலை தலத்திருவைக்கு ஆழமான காயம்


மார்ச்,31,2015. இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது, தலத்திருவைக்கும் குடும்பங்களுக்கும் ஆழமான காயமாக உள்ளது என்று இந்திய ஆயர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

திருஅவை மனித வாழ்வை அதன் தொடக்கமுதல் இறுதிவரை ஆதரிக்கிறது, விவசாயிகள் துன்புறுவது திருஅவைக்கு வேதனயளிக்கிறது, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது கடும் துன்ப நிகழ்வாக அமைந்துள்ளது என்று மகாராஷ்டிர மாநிலத்தின் Vasai ஆயரான பேராயர் Felix Anthony Machado அவர்கள் கூறினார்.

Vasai மறைமாவட்டத்தில் கிராம மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் விதத்தில், 600க்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களை முன்னின்று நடத்திய பேரணியில் உரையாற்றிய பேராயர் Machado அவர்கள், மக்கள் மோதல்களில் ஈடுபடும்போது திருஅவை ஒப்புரவையும் அமைதியையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றது என்று கூறினார்.

இதற்கிடையே, இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை 26 விழுக்காடு அதிகரித்திருப்பதாக, மத்திய வேளாண் துறை இணையமைச்சர் மோகன்பாய் குந்தாரியா அண்மையில் மக்களவையில் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் 2014ம் ஆண்டில் 1,109 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை, 2013ம் ஆண்டில் 879ஆகவும், 2012ம் ஆண்டில் 1,046ஆகவும் இருந்தது. கடந்த ஆண்டில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 986 விவசாயிகளும், தெலுங்கானாவில் 84 பேரும், ஜார்கண்டில் 29 பேரும் தற்கொலை செய்து கொண்டனர். கடன் தொல்லை, வறட்சி, பயிர் இழப்புகள், சொந்தப் பிரச்சனைகள் உள்ளிட்டவை விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணங்களாக மாநில அரசுகள் கூறியுள்ளன.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.