2015-06-03 16:51:00

UNESCO கருத்தரங்கில் கர்தினால் பரோலின் துவக்க உரை


ஜூன்,03,2015 கல்வி மற்றும் கலாச்சாரம் தொடர்பான பணிகளை கத்தோலிக்கத் திருஅவை மேற்கொள்ளும்போது, அவற்றை, நற்செய்தி அறிவிப்புப் பணியாக ஆற்றுவதைக் காட்டிலும், மனித மேம்பாட்டை நிலைநிறுத்தும் பணிகளாகவே திருஅவை மேற்கொண்டு வருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பாரிஸ் நகரில் அமைத்துள்ள ஐ.நா. குழந்தைகள் நலவாழ்வு அமைப்பான UNESCO இல்லத்தில் ஜூன் 3, இப்புதனன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் துவக்க உரையாற்றிய, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இவ்வாறு கூறினார்.

மனித நலத்தை, தன் பணிகளின் மையமாகக் கொண்டு பணியாற்றிவரும் கத்தோலிக்கத் திருஅவை, உலகெங்கும் கல்வி புகட்டப்பட வேண்டியதன் அவசரத்தை நன்கு உணர்ந்து பணியாற்றுகிறது என்று கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.

அனைத்து மக்களுக்கும் எழுத்தறிவைக் கொணர்தல், பெண் கல்வி, ஆகிய தூண்களின் மீது சமுதாய முன்னேற்றம் என்ற கட்டடம் எழுப்பப்பட வேண்டும் என்பதை, திருஅவை உறுதியாக நம்புகிறது என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

திருப்பீடத்தின் சார்பில் UNESCOவில் பணியாற்றுவோர் இணைந்து, UNESCOவின் 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 'இன்றும், நாளையும் கல்விப் புகட்டுதல்' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கிற்கு, UNESCOவின் தலைமை இயக்குனர், ஐரீனா பொகோவா அவர்கள் தலைமை தாங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.