2015-06-08 15:50:00

செப‌ம் ம‌ற்றும் உட‌ன் ஆய‌ர்க‌ளின் ஆதரவையும் கொண்ட ஆய‌ர் ப‌ணி


ஜூன்,08,2015. மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில், செபத்தை நோக்கி திரும்பும் அதேவேளை, தங்கள் உடன் ஆயர்களின் நட்புணர்வும், சகோதரத்துவமும் இணைந்த உதவியையும் நாடவேண்டும் என Puerto Rico ஆயர்களிடம் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அத் லிமினா' சந்திப்பை முன்னிட்டு உரோம் நகர் வந்துள்ள Puerto Rico ஆயர்களை இத்திங்களன்று நண்பகல் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவைத் தலைவர்கள் எப்போதும் அமைதியைக் கட்டியெழுப்புபவர்களாகவும், ஒருவர் ஒருவரோடு ஒத்துழைப்பவர்களாகவும் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஒவ்வோர் ஆயரும் குருக்களின் முன்மாதிரிகையாக இருந்து அவர்களின் ஆன்மீக புதுப்பித்தலுக்கு உதவவேண்டும் என வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  குருக்களுக்கான பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினார்.

பொருளாதாரத் துன்பச்சூழல்கள், குடிபெயர்வு, குடுபங்களுக்குள் வன்முறை, வேலைவாய்ப்பின்மை, போதைப்பொருள் கடத்தல், இலஞ்ச ஊழல் என பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கிவரும் குடும்பங்களுக்கு ஆற்றவேண்டிய மறைப்பணிகள் குறித்தும் Puerto Rico ஆயர்களிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

திருமண மதிப்பீடுகள் குறித்தும் ஆயர்கள் தங்கள் சமுதாயத்திற்கு உணர்த்தவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத்தின் மீது கொள்ளும் அக்கறையின் வெளிப்பாட்டை உள்ளடக்கியதாக நற்செய்தி அறிவித்தல் பணி இருக்கவேண்டும் எனவும் ஆயர்களிடம் தெரிவித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.