2015-06-15 17:05:00

திருத்தந்தை: உலக இரைச்சல்களிலிருந்து விடுதலைப் பெறுங்கள்


ஜூன்,15,2015. இறையருளைப் பெறுவதற்கு எப்போதும் தயாராக இருக்கும்படி, இவ்வுலகின் ஆசைகள் மற்றும் இரைச்சல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, கிறிஸ்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையருளை நாம் பெறவேண்டுமெனில், இவ்வுலக ஆசை மற்றும் வீண் இரைச்சல்களிலிருந்து நம் இதயம் சுதந்திரம் பெற்றதாக இருக்கவேண்டும் என்றார்.

கோவிலுக்குச் செல்வதும், திருப்பலிகளில் பங்கேற்பதும் மட்டும் போதாது, கிறிஸ்தவர்களாக நாம் வாழ்ந்துகாட்ட வேண்டும், இல்லையெனில் நாம் பிறருக்கு இடறலாக இருப்போம் எனவும் கூறினார் திருத்தந்தை.

‘கண்ணுக்கு கண்’ என அலையும் உலகில் 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டு' என வருவதே இறைவனின் குரல் எனவும் தன் மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாழ்ச்சியுடைய இதயத்தை நாம் கொண்டிருப்பதுடன், நம் செயல்கள் வழியே பிறருக்கு இடறலாக இல்லாமல் இருப்பதும் மிகவும் முக்கியம் என மேலும் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.