2015-06-23 16:59:00

பிறரன்பு சகோதரிகள் சபையின் முன்னாள் தலைவி காலமானார்


ஜூன்,23,2015. அன்னை தெரேசாவுக்குப் பின், 1997ம் ஆண்டுமுதல், 12 ஆண்டுகள் பிறரன்பு சகோதரிகள் துறவு சபையை வழிநடத்தி வந்த  அருள்சகோதரி நிர்மலா ஜோஷி அவர்கள், இத்திங்கள் இரவு இறைபதம் சேர்ந்தார்.

அன்னை தெரேசாவின் பிறரன்புப் பணிகளால் கவரப்பட்டு, கிறிஸ்தவராக திருமுழுக்குப் பெற்று, பின்னர் பிறரன்பு சகோதரிகள் சபையிலும் இணைந்த சகோதரி நிர்மலா அவர்கள், தன் 81ம் வயதில் காலமானார்.

1934ம்ஆண்டு ராஞ்சியில் பிறந்த சகோதரி நிர்மலா, சில காலம் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். தேச நலனுக்கு ஆற்றியுள்ள பணிகளுக்கென இந்திய அரசின் இரண்டாவது உயரிய விருதான 'பத்ம விபூஷன்’ விருதையும், 2009ம் ஆண்டில் பெற்றுள்ளார் சகோதரி நிர்மலா.

சகோதரி நிர்மலாவின் இறுதிச் சடங்கு இப்புதன் மாலை உள்ளூர் நேரம் 4 மணிக்கு பிறரன்பு சகோதரிகளின் கொல்கத்தா தலைமையில்லத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட, பல தலைவர்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்.

 "அன்னை தெரசாவுக்கு பிறகு மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி அறக்கட்டளையை கவனித்து வந்த சகோதரி நிர்மலா ஜோஷி அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. கொல்கத்தாவும், இந்த உலகமும் அவரது இழப்பால் வாடும்" என தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் மம்தா.

இதேபோல், பிரதமர் நரேந்திர மோடியும் டுவிட்டரில் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில், "சகோதரி நிர்மலா, தனது வாழ்நாளை ஏழை எளிய மக்களுக்காக அர்ப்பணித்தவர். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி அமைப்பின் சகோதரிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

ஆதாரம்: AsiaNews/வத்திக்கான வானொலி.








All the contents on this site are copyrighted ©.