2015-07-06 15:31:00

வீடற்ற மக்களை வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை


ஜூலை,06,2015. இலத்தீன் அமெரிக்காவுக்கான ஒன்பது நாள் கொண்ட தனது இரண்டாவது திருத்தூதுப் பயணத்தை இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஈக்குவதோர், பொலிவியா, பராகுவாய் ஆகிய “மூன்று சகோதரிகள்” நாடுகளுக்கான இத்திருத்தூதுப் பயணத்தை இஞ்ஞாயிறு காலையில் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் பல வீடற்ற மக்களைச் சந்தித்தார் திருத்தந்தை.

திருத்தந்தையின் தர்ம செயல்களை ஆற்றும் பேராயர் Konrad Krajewski அவர்கள் ஏற்பாடு செய்த இச்சந்திப்பில், பேராயர் Krajewski அவர்களுடன், வீடற்ற ஏழு பேர் இருந்தனர் என்று ஆன்சா செய்தி நிறுவனம் கூறியது.

இந்த வீடற்ற மக்களுக்குத் திருத்தந்தை ஆசிர் வழங்கியதோடு இச்சந்திப்பு நிறைவுற்றது.

இலத்தீன் அமெரிக்காவுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டுள்ள இந்தப் பயணத்தில் முதலில் ஈக்குவதோர் நாட்டில் முதல் நாள் பயண நிகழ்வுகளை நிறைவு செய்து, தற்போது 2வது நாள் பயண நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார்.  

ஆதாரம் : ANSA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.