2015-07-21 16:13:00

அண்டவெளியில் அறிவுத் தேடல் ஆரம்பம்


ஜூலை,21,2015. அண்டவெளியில் அறிவுள்ள உயிரினங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிவதற்காக அடுத்த பத்தாண்டுகளில் பத்து கோடி டாலர்களைச் செலவழிக்கவுள்ளதாக பெரும் செல்வந்தர் ஒருவர் அறிவித்துள்ளார்.

முழு பால்வெளிக்கு அப்பாலுள்ள மற்ற பால்வெளி மண்டலங்களிலும் அறிவுள்ள உயிரினங்களைத் தேடும் இத்திட்டத்தை, இரஷ்யப் பெரும் செல்வந்தர் Yuri Milner அவர்கள் நடத்தவுள்ளார்.

வானொலி மற்றும் ஒளியியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தக் கண்டுபிடிப்புக்கான முயற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதற்கான அறிமுக நிகழ்வு இலண்டலிலுள்ள ராயல் சொசைட்டியில் நடைபெற்றது.

அந்த நிகழ்வில் பங்குபெற்று உரையாற்றிய பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங், அண்டவெளியிலுள்ள வேற்றுக் கிரகங்களைச் சேர்ந்த அறிவு நிறைந்த உயிரினங்கள் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கலாம் எனத் தெரிவித்தார்.

பூமியில் வாழ்பவர்கள் மட்டுமே அறிவாளிகளா அல்லது அதற்கு வெளியேயும் அறிவால் மேம்பட்ட உயிரினங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறியும் நேரம் இப்போது வந்துள்ளது எனவும் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறுகிறார்.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.