2015-07-27 15:46:00

வாரம் ஓர் அலசல் – நாங்கள் இருக்கும்வரை நீங்கள் அனாதை இல்லை


ஜூலை,27,2015. மனிதராகிய நம் ஒவ்வொருவருக்கும் யாராவது ஒருவரின் உதவி எப்போதும் தேவைப்படுகிறது. பிறரது உதவி இன்றி யாராலும் இவ்வுலகில் வாழ முடியாது. ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு கட்டத்தில் பிறரது உதவியை நாட வேண்டியுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் வளாகத்தில் கொளுத்தும் வெயிலில், இஞ்ஞாயிறு(ஜூலை26,2015) நண்பகல் மூவேளை செப உரையைக் கேட்பதற்காக நின்றுகொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம், பிறருக்கு உதவுதல் பற்றிக் கூறினார்.

"நாம் ஏழைகளாக இருந்தாலும்கூட, எதையாவது நாம் பிறருக்குக் கொடுக்க முடியும். இயேசு நமது உடல் பசியை மட்டும் போக்கவில்லை, அதைவிட இன்னும் மிக ஆழமான பசிகளை, வாழ்விற்குப் பொருள் தேடும் நம் பசியை, இறைவனைத் தேடும் நம் பசியை திருப்தி செய்கிறார். நம் மத்தியில் பலர், துன்பங்கள், தனிமை மற்றும் ஏழ்மையை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு நாம் என்ன செய்கிறோம்? துன்பங்களும், வறுமையும், தனிமைத் துன்பமும் வாட்டுகின்றனவே என்று புகார் சொல்லிக்கொண்டே இருப்பதால் பிரச்சனைகளைத் தீர்க்க இயலாது. ஆனால், நம்மிடம் குறைவாக இருந்தாலும், அவற்றை அளிக்கலாம். நிச்சயமாக, நம்மிடம், சிலமணி நேரங்கள், சில திறமைகள், சில சிறப்புப் பண்புகள் இருக்கின்றன, நம் மத்தியில் இவை இல்லாமல் இருப்பவர் யார்? அவற்றை இறைவன் கரங்களில் வைப்பதற்கு நாம் விருப்பம் காட்டினால், இந்த உலகில் இன்னும் கொஞ்சம் அன்பைக் கொண்டு வரலாம். இன்னும் கொஞ்சம் அமைதியை, நீதியை மற்றும் மகிழ்வைக் கொண்டு வரலாம். நம் ஒருமைப்பாட்டுணர்வின் சிறிய அடையாளங்களை இறைவனால் பலுகச் செய்ய இயலும்"

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லியிருப்பதுபோன்று, இறைவன் நமக்கு அளித்துள்ள நேரங்கள், திறமைகள், சிறப்புப் பண்புகள் போன்றவற்றை பிறருக்காகச் செலவழித்தால் நமது அப்பண்புகள் மேலும் உயர்வடையும், மேலும் வளரும். அதன் வழியாக உலகிலும் இன்னும் கொஞ்சம் அன்பு, அமைதி, நீதி மற்றும் மகிழ்வை நாம் கொண்டு வரலாம். இன்றைய உலகில், குறிப்பாக, மத்திய கிழக்கில் அன்பும், அமைதியும், நீதியும், மகிழ்வும் சற்று அதிகமாகவே தேவைப்படுகின்றன. அப்பகுதியில் இன்னும் ஆயுத சப்தங்கள் மரணிக்கவில்லை. சிரியாவில் ஐந்தாவது ஆண்டாக அரசுப் படைகளுக்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. சிரியா அரசுத்தலைவர் Bashar al-Assad அவர்கள் இஞ்ஞாயிறன்று தமாஸ்கில் அரசு அதிகாரிகளுக்கு ஆற்றிய உரையில்...

சிரியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று போரிட்டு நாட்டைப் பாதுகாப்பதற்கு இராணுவத்தில் படைவீரர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, நாட்டின் சில பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, சில பகுதிகளிலிருந்து இராணுவம் கட்டாயமாக வெளியேற வேண்டிய சூழல், புரட்சியாளர்களுக்கு, சவுதி அரேபியா, துருக்கி, கத்தார் போன்ற அந்நிய நாடுகளின் உதவி இருப்பதே இதற்குக் காரணம்.

என்று கூறியுள்ளார். சிரியாவில் இடம்பெற்றுவரும் போரினால் 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். ஒரு காலத்தில் மூன்று இலட்சம் படைவீரர்களைக் கொண்டு சக்திவாய்ந்ததாய் இருந்த சிரியா இராணுவம், இன்று ஏறக்குறைய பாதிப் பேரையேக் கொண்டிருக்கிறது. மேலும், ஏமன் நாட்டில் அரசு முன்வைத்துள்ள இடைக்காலப் போர் நிறுத்தத்தை அந்நாட்டு Houthi புரட்சியாளர்கள் புறக்கணித்துள்ளனர். ஆப்ரிக்க நாடான சொமாலியாவில் ஓர் உணவு விடுதியில் குண்டு வெடித்ததில் பலர் பலி. இப்படி உலகில் பல இடங்களில் வன்முறை. எவ்வுயிரையும் தன்னுயிர்போல் நோக்காமல், இருப்பதே இந்த வன்முறைகளுக்குக் காரணம் என்று சொல்லலாம். ஆயினும், சமுதாயத்தில் தன்னலமில்லா தொண்டாற்றும் சில அன்புள்ளங்கள் வாழ்ந்து வருவதை அவ்வப்போது அறிந்து வருகிறோம்.

மேரியம்மாள் என்பவர், தமிழகத்தின் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் போதெல்லாம் அவர் கையில் பச்சிளம் குழந்தை ஒன்று தவழும். மேரியம்மாள் நடத்தும் கருணை இல்லம், நாமக்கல் மாவட்டத்துக்கு இடைப்பட்ட பகுதியில் சேந்தமங்கலம் பிரிவு சாலையில் இருக்கிறது. கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் ஆதரவற்ற முதியோருக்கும் அந்த கருணை இல்ல வாசல் எப்போதும் திறந்திருக்கும். குழந்தை பிறந்ததுமே குப்பையென வீசப்படும் சிசுக்களை எடுத்து வந்து, பராமரித்து, அந்தக் குழந்தைகளை அரசிடம் ஒப்படைத்து வருகிறார் மேரியம்மாள். கடந்த 21 ஆண்டுகளில் மூன்று ஆண் குழந்தைகள் உட்பட 80 குழந்தைகளை, தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்த்துள்ளார். திக்கற்றுத் தவிக்கும் 15 ஆதரவற்ற முதியோர்களைத் தன் வீட்டில் வைத்துப் பராமரித்து வருகிறார். இவர் தனது திருமணத்துக்குப் பிறகு தன் கணவர் மைக்கேலுடன் இணைந்து ஆதரவற்றோருக்கு ஆதரவளிக்கத் தொடங்கினார். தி இந்து நாளிதழ் நிருபரிடம் மேரியம்மாள் அவர்கள் இப்படி விவரித்துள்ளார்.

தொப்புள் கொடியின் இரத்தம் உலர்வதற்குமுன் தெருவில் வீசப்பட்டு, பாலுக்காக வீறிட்டு அழும் குழந்தைகளின் குரல் கேட்டால் எப்படிப்பட்ட மனிதருக்கும் இதயம் நடுங்கும். தெருவில் வீசப்படும் குழந்தைகளைப் பார்த்து உடைந்து போனேன். இந்த அவலத்தைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தால் இந்தப் பிறவி எடுத்து என்ன பயன்? வாழும் ஒவ்வொரு நொடியும் பிறருக்காக உதவி செய்து வாழ்கிறோம் என்ற பூரிப்புக்கு ஈடு இணையே இல்லை

என்று சொல்லும் மேரியம்மாள், 21 ஆண்டுகளுக்கு முன்பு, தனது வீட்டை மேரி கருணை இல்லமாக மாற்றினார். சேலம், நாமக்கல் மாவட்டங்களில் குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்ட குழந்தைகள் குறித்த தகவல் கிடைத்தால் போதும். காற்றைவிட விரைவாகச் சென்று குழந்தையை மீட்பார். கண் தெரியாத மூதாட்டிகள் ஐந்து பேர், மன வளர்ச்சி குன்றிய மூதாட்டிகள் நான்கு பேர் என 25 ஆதரவற்ற மூதாட்டிகளைப் பராமரித்து வருகிறார். நல்ல உள்ளம் படைத்தவர்கள், வீடாக இருந்ததை இல்லமாகக் கட்டிக்கொடுத்திருக்கிறார்கள். முதுமை காரணமாகத் தன்னால் பழையபடி ஓடியாடி ஆதரவற்ற முதியவர்களுக்கு வேலை செய்ய முடியவில்லை என்கிறார் மேரியம்மாள். தற்போது இவரது மூத்த மகன் சகாயம், கடந்த மூன்று ஆண்டுகளாக உதவியாக இருக்கிறார். அன்பால் அனைத்தும் சாத்தியம் என்பதற்குச் சாட்சியாக வாழ்கிறார் இவர். அனைத்தையும் சாத்தியப்படுத்திய அன்பு என்ற தலைப்பில் மேரியம்மாள் பற்றி தி இந்து இதழில் இத்தகவல் பிரசுரிக்கப்பட்டிருந்தது. மற்றொரு வயதானவர் ஆற்றிய செயல் ஒன்றைக் கேட்போம்.

பக்கத்து அடுக்குமாடிக் குடியிருப்பில் அந்தப் பாட்டி குடிவந்த சில மாதங்களாக, அவர் வீட்டில் எப்போதும் தொலைக்காட்சி அலறிக்கொண்டு இருந்தது. பாட்டி வீட்டு தொலைக்காட்சி சப்தத்தில் அடுத்த வீட்டு இராதா எரிச்சல் அடைந்து தனது வீட்டு தொலைக்காட்சியைப் பார்ப்பதையும், வானொலியைக் கேட்பதையும் முழுவதும் விட்டுவிட்டார். காதைப் பொத்திக் கொள்ளாத குறைதான். ஆனால், கடந்த சில நாட்களாக பக்கத்து வீட்டில் இருந்து தொலைக்காட்சி சத்தம் வரவே இல்லை. அதை இராதா, தனது கணவரிடம் சொன்னார். “என்னம்மா சொல்ற?... அவங்க வீட்டு டிவி ரிப்பேர் ஆயிருக்குமோ?... பாவம், அந்தப் பாட்டி என்ன செய்வாங்க?... டிவியை சரி செய்ய மெக்கானிக்கை அனுப்பவான்னு நான் போய்க் கேட்டு வரட்டுமா?” என்றார் இராதவின் கணவர். “உங்களுக்கு என்ன பைத்தியமா?... அவங்க வீட்டு டிவி இரைச்சல் இல்லாம இப்பதான் நான் மகிழ்ச்சியா இருக்கேன். இது உங்களுக்கு பொறுக்கலையா?” என்றார் கோபமாக. “அது இல்ல, பாவம் துணை இல்லாம இருக்காங்க. என்ன ஏதுன்னுதான் கேட்போமே?” என்று பேசிக்கொண்டே இராதாவின் கணவர் சட்டையை மாட்டிக்கொண்டுப் புறப்பட்டார். இராதாவாலும் மறுப்பு எதுவும் சொல்ல முடியாமல் கணவர் பின்னால் சென்றார். பாட்டி வீட்டு அழைப்பு மணியை அழுத்தியதும், அந்தப் பாட்டிதான் கதவைத் திறந்தார். அவர்களைப் பார்த்ததும், “வாங்க, வாங்க...” என்று வரவேற்று ஷோபாவில் அமரச் சொல்லி விட்டு குடிக்கத் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். “டீ, காபி ஏதாவது சாப்பிடறீங்களா?” என்று அந்தப் பாட்டி கேட்க, “அதெல்லாம் வேணாம்மா. கொஞ்ச நாளா உங்க தொலைக்காட்சி சத்தம் கேட்கவே இல்லை.. அதான் அதைப் பழுதுபார்க்க ஆள் அனுப்பணுமான்னு கேட்டுட்டு போக வந்தோம்!” என்று இராதாவின் கணவர் சொன்னார். அதைக்கேட்டு மெல்ல புன்னகைத்த அந்தப் பாட்டி, “என் வீட்டு தொலைக்காட்சி ரிப்பேர் ஆகலைங்க. நல்லாதான் இருக்கு...” என்றார். பாட்டி சொன்னதைக் கேட்டதும் அவர்கள் இருவருக்கும் குழப்பம். அதைப் புரிந்துகொண்ட பாட்டி, “வீட்ல தனியா இருந்த எனக்கு அந்த டிவி சத்தம்தான் சொந்தபந்தம். எங்கூட பலபேர் இந்த வீட்ல இருக்கிற மாதிரியும், நான் அனாதை இல்லேங்கற மாதிரியும் எனக்கு அந்த டிவி சத்தம்தான் தெம்பைக் கொடுக்கும். அதுக்காகத்தான் நான் டிவியை சத்தமா வைச்சு கேட்பேன்!” என்றார். “சரி, இப்ப என்னாச்சு... டிவி சத்தமே கேட்க மாட்டேங்குதே”என்று இராதாவின் கணவர் கேட்டார். அதற்குப் பாட்டி, “இந்த ஆண்டு உங்க பையன் சுகுமார் ப்ளஸ்2 படிக்கிறான்னு கேள்விப்பட்டேன். அதான் நான் அனாதையா உணர்ந்தாலும் பரவாயில்லை, என்னால அவன் படிப்பு பாதிக்கக் கூடாதுன்னு டிவி வைக்கறதை விட்டுட்டேன். நீங்க இப்ப வார்த்தைக்கு வார்த்தை என்னை அம்மான்னு கூப்பிடறதைக் கேட்கும்போது நான் அனாதை இல்லைன்னு கொஞ்சம் மகிழ்ச்சியா இருக்கு தம்பி!” என்றார். “நாங்களெல்லாம் இருக்கறவரை சத்தியமா நீங்க அனாதை இல்லம்மா!” என்று இராதாவின் கணவர் சொல்லி முடிக்கும்முன், இராதா தாவிச் சென்று பாட்டியை கட்டி அணைத்துக் கொண்டார்!

இந்தப் பாட்டி போன்று, இந்தப் பாட்டியைக் கட்டி அணைத்த அந்தத் தம்பதியர் போன்று கருணை இல்ல மேரியம்மாள் போன்று நாமும் வாழ முயற்சிப்போமா... அன்பு நெஞ்சங்களே, நீங்கள் ஆற்றும் நற்செயல்களையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளலாமே.... “நாங்களெல்லாம் இருக்கறவரை சத்தியமா நீங்க அனாதை இல்லைம்மா!...” இந்த வார்த்தைகளை நாம் எத்தனை பேரிடம் சொல்லியிருக்கிறோம், இவ்வார்த்தைகளை எத்தனை பேரிடம் சொல்வதற்கு நாம் உறுதி எடுத்துள்ளோம்?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.