2015-09-17 16:39:00

பல்சமய ஒருங்கிணைப்பை வளர்க்க கத்தோலிக்க கல்லூரிகள்


செப்.17,2015. கிறிஸ்துவின் சாயலில் வளர்ந்து, முதிர்ச்சியடையும் வகையில், தங்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும் உருவாக்குவது, கத்தோலிக்கப் பல்கலைக் கழகங்களின் முக்கியப் பணி என்று இந்தோனேசியாவின் ஜகார்த்தா பேராயர், இக்னேசியஸ் சுஹார்யோ (Ignatius Suharyo Hardjoatmodjo) அவர்கள் கூறினார்.

தென் கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் இயங்கிவரும் கத்தோலிக்கப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் கழகம் (ASEACCU) ஜகார்த்தாவில் ஏற்பாடு செய்திருந்த ஓர் ஆசியக் கருத்தரங்கில் பேசிய இந்தோனேசிய ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் சுஹார்யோ அவர்கள் இவ்வாறு கூறினார்.

'கத்தோலிக்க உயர்நிலை கல்வியும், அனைவரையும் உள்ளடக்கும் மத உணர்வும்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், ஆஸ்திரேலியா, கம்போடியா, இந்தோனேசியா, ஜப்பான், பிலிப்பின்ஸ், தென் கொரியா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளின் மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் ஒருங்கிணைந்து வாழ்வதற்கு உரிய மனநிலையை பேணி வளர்ப்பது கத்தோலிக்கப் பல்கலைக் கழகங்களின் முக்கியப் பணி என்று, கருத்தரங்கின் அமைப்பாளர்களில் ஒருவரான முனைவர், Widianarko அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

பிலிப்பின்ஸ் நாட்டின் மிண்டனாவோ பகுதியிலிருந்து இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட இஸ்லாமிய மாணவர், Nor-Jamal Bantugan அவர்கள் அளித்த பேட்டியில், தான் இந்தோனேசியாவில், புத்த மதத்தைச் சார்ந்தவர் குடும்பத்துடன் தங்கியிருந்ததாகவும், அக்குடும்பம் தத்தெடுத்து வளர்க்கும் இரு இளையோரில் ஒருவர், கத்தோலிக்க தொமினிக்கன் துறவு சபையில் சேர தன்னையே தயாரித்து வருவதாகவும் கூறினார்.

இஸ்லாமியர் உண்மையான இஸ்லாமியராகவும், கிறிஸ்தவர், உண்மையான கிறிஸ்தவராகவும் வாழ்ந்தால், இவ்வுலகம் இன்னும் அதிக அமைதியாகவும், மகிழ்வாகவும் இருக்கும் என்று இளையவர் Bantugan அவர்கள், மேலும் கூறினார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.