2015-11-10 14:33:00

திருத்தந்தை : ஊழல் புற்றுநோய்க்கு எதிராகப் போராடுங்கள்


நவ.10,2015. கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவோடு பயணம் மேற்கொள்வதற்குத் தயாராக இருக்குமாறும், நம் காலத்தில் நம்மோடு வாழ்பவர்க்கு நாம் பணிபுரியும் பொருட்டு நமக்கு இறைவன் அடுத்தவராக இருந்து நமக்குப் பணியாற்றுகிறார் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

டஸ்கன் மாநிலத்திலுள்ள பிராத்தோ மற்றும் பிளாரன்ஸ் நகரங்களுக்கு ஒருநாள் திருத்தூதுப் பயணத்தை இச்செவ்வாய் காலை 7 மணிக்கு வத்திக்கானிலிருந்து தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிராத்தோ பேராலய வளாகத்தில், காலை 8.15 மணியளவில் உலகின் தொழிலாளர்களைச் சந்தித்து உரையாற்றினார்.

தொழிலாளர்கள் சுரண்டப்படுவதற்கு எதிராக அழைப்பு விடுத்த திருத்தந்தை, ஊழல் என்ற புற்றுநோய்க்கும், சட்டவிரோத நடவடிக்கை என்ற புற்றுநோய்க்கும், மனித மற்றும் தொழிலில் நடைபெறும் சுரண்டல் என்ற புற்றுநோய்க்கும் எதிராக ஒவ்வொரு சமூகமும் போராட வேண்டுமென வலியுறுத்தினார்.

பிராத்தோ நகரில் 2013ம் ஆண்டில் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் பலியான, ஏழ்மையில் நிலையில் வாழ்ந்த ஐந்து சீன ஆண்கள் மற்றும் இரு சீனப் பெண்கள் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்தக் கோர நிகழ்வு, சுரண்டல் மற்றும் மனிதமற்ற வாழ்வு நிலைகளின் துன்ப நிகழ்வாகும் என்று கூறினார்.

எதிர்மறைச் சிந்தனைகளுக்கும், பின்வாங்கும் உணர்வுகளுக்கும் இடம்கொடாமல் வாழுமாறு இளையோரை ஊக்கப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரும் அன்னைமரியாவில் தங்களின் நம்பிக்கையை வைக்குமாறு  கேட்டுக்கொண்டார்.

இச்சந்திப்புக்கு முன்னர் பிராத்தோ பேராலயம் சென்று அங்கு வணங்கப்பட்டுவரும் “தாமசின் இடுப்புக்கச்சை” என்ற புனிதப்பொருளுக்கு வணக்கம் செலுத்தினார் திருத்தந்தை, இப்புனிதப்பொருள், அன்னை மரியா விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரிடமிருந்த விழுந்த இடுப்புக்கச்சை என்று பாரம்பரியமாகச் சொல்லப்பட்டு வருகிறது.

இந்தப் புனிதப்பொருள் உணர்த்தும் உட்பொருள் பற்றியும் விளக்கிய திருத்தந்தை, விவிலியத்தின்படி, ஒருவருடைய இடுப்புக் கச்சை விழுவது என்பது, பயணம் மேற்கொள்வதற்குத் தயாராக இருப்பது என்று பொருள் என்றும் கூறினார்.

திருஅவை மிகுந்த ஆர்வத்துடன் திருத்தூதுப்பணியைப் புதுப்பிக்க வேண்டுமென்று நம் ஆண்டவர் அழைப்பு விடுக்கிறார், பெரும் பொறுப்பையும் திருஅவையிடம் வழங்குகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.