2015-12-01 14:47:00

பூமியின் மீது கீறல்கள், படைத்தவன் மீது காயங்கள்


இந்து மதப் பாரம்பரியத்தில் சொல்லப்படும் ஒரு கதை இது:

சிறுவன் கணேசன் ஒரு நாள் தெருவில் சென்றுகொண்டிருந்த ஒரு பூனைக்குட்டியைக் கண்டான். அதனுடன் விளையாடுவதாக எண்ணி, அப்பூனைக்குட்டியின் காதுகளையும், வாலையும் இழுத்தான். அப்பூனையின் முகத்தில் கீறி, அதன் தலைமுடியை இழுத்து நேராக்க முயன்றான். அருகில் கிடந்த ஒரு குச்சியை எடுத்து, பூனைக்குட்டியின் முதுகில் காயம்படும்படி அடித்தான். வலியில் அலறியவண்ணம் பூனைக்குட்டி அவ்விடம் விட்டு ஓடியது.

சிறுவன் கணேசன் வீடு திரும்பியதும், தன் அன்னையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். அவனது தாயின் முகத்தில் கீறல்கள் இருந்தன. அவரது தலைமுடி அலங்கோலமாய் கிடந்தது. அவரது முதுகில் பிரம்படியால் உண்டான தழும்புகள் இருந்தன. நடக்கவும் முடியாமல் அவர் அமர்ந்திருந்தார்.

அதிர்ச்சியடைந்த சிறுவன் கணேசன், தாயிடம் சென்று, "அம்மா, உங்களை யார் இந்நிலைக்கு உள்ளாக்கியது?" என்று கேட்க, அம்மா, வலியைப் பொறுத்துக்கொண்டு, "நீதான் மகனே" என்று கூறினார்.

"என்ன சொல்கிறீர்கள்? நான் ஒருபோதும் அப்படி செய்யமாட்டேன்" என்று அதிர்ச்சியிலும், கோபத்திலும் கத்தினான் கணேசன்.

"சிறிது நேரத்திற்கு முன் ஒரு பூனைக் குட்டியிடம் நீ எவ்விதம்  நடந்துகொண்டாய் என்பது நினைவிருக்கிறதா?" என்று தாய் கேட்டார்.

தான் அடித்து விரட்டிய பூனைக்குட்டியின் சொந்தக்காரர்தான் அம்மாவை அடித்துவிட்டார் என்று எண்ணிய கணேசன், "எங்கே அந்த ஆள்? சொல்லுங்கள்" என்று மீண்டும் கத்தினான்.

அம்மா அவனிடம் பொறுமையாக, "கணேசா, நான் உனக்கு மட்டும் தாயல்ல. இந்த பூமியின் அனைத்து உயிர்களுக்கும் நான் தாய். மிகச் சிறிய உயிரினத்திற்கு நீ செய்வதையெல்லாம் எனக்கேச் செய்கிறாய்" என்று கூற, கணேசன் தன் தவறை உணர்ந்து, கண்ணீர் வடித்தான்.

பூமியின் மீது விழும் கீறல்கள், பூமியைப் படைத்த ஆண்டவன் மீது விழும் காயங்கள். பூமியை எவ்வளவு தூரம் காயப்படுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திக்க, உலகத் தலைவர்கள் பாரிஸ் மாநகரில் ஓர் உச்சி மாநாட்டை நடத்தி வருகிறார்கள். இந்த உச்சிமாநாட்டின் விளைவாக, பூமித் தாய் மேலும் காயப்படுவாரா? அல்லது, குணம் பெறுவாரா? நம்பிக்கையோடு காத்திருப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.