2015-12-15 17:06:00

அருள்சகோதரர்களின் முக்கியத்துவத்தை விளக்கும் வத்திக்கான் ஏடு


டிச.15,2015. அருள்சகோதரர்கள் வாழ்வைப் பாராட்டவும், அவ்வாழ்வைத் தேர்ந்தெடுப்போரின் இறையழைத்தலை ஊக்குவிக்கவும் உதவும் நோக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது திருப்பீட துறவு சபைகள் பேராயம்.

திருஅவையில் அருள்சகோதரர்களின் தனித்துவமும் பணியும் என்ற தலைப்பில் இத்திங்களன்று ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்ட ஐம்பது பக்க ஏடு, அருள்சகோதரர்களின் வாழ்வு மற்றும் அவர்களின் நற்செய்திப் பணி, தியாகம், உடன்பிறந்த உணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

திருப்பீட துறவு சபைகள் பேராயத் தலைவர் கர்தினால் João Braz de Aviz, அதன் செயலர் பேராயர் Jose Rodriguez Carballo ஆகிய இருவரும் இந்த ஏட்டை செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டனர்.

திருஅவையில் அருள்சகோதரர்களின் அழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும், குறிப்பாக, அவர்கள் இன்றைய உலகில் எதிர்கொள்ளும் சவால்களின் அடிப்படையில் வரைவுத் தொகுப்பு ஒன்றைத் தயாரிக்குமாறு முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் 2008ம் ஆண்டில் கேட்டுக்கொண்டதைக் குறிப்பிட்டார்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில், உலக அளவில் துறவிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அருள்சகோதரர்களின் எண்ணிக்கை அதிகமாகக் குறைந்துள்ளது. 1965ம் ஆண்டில் கிறிஸ்தவ சகோதரர்கள் சபையில் 16 ஆயிரமாக இருந்த எண்ணிக்கை தற்போது ஐந்தாயிரத்துக்கும் குறைவாக உள்ளது.

உலகில் 2013ம் ஆண்டின் இறுதியில், அருள்சகோதரர்களின் எண்ணிக்கை 55,250க்கு அதிகமாக இருந்தவேளை, மறைமாவட்ட மற்றும் துறவற அருள்பணியாளர்களின் எண்ணிக்கை 4,15,350 ஆக இருந்தது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.