2016-02-03 17:25:00

பங்களாதேஷ் தலத்திருஅவை இரட்டிப்பு வளர்ச்சி


பிப்.03,2016. பங்களாதேஷ் நாட்டில் பாரிசால் (Barisal) என்ற புதிய மறைமாவட்டத்தைத் துவக்குவதன் வழியாக, கத்தோலிக்கருக்கு பணியாற்றுவது மட்டுமல்ல, ஏனைய மக்களுக்கும் கிறிஸ்துவை அறிமுகப்படுத்தும் பணியை ஆற்ற விழைகிறோம் என்று அம்மறை மாவட்டத்தின் முதல் ஆயராகப் பொறுப்பேற்கும் லாரன்ஸ் சுப்ரோத்தோ அவர்கள் கூறினார்.

கடந்த ஆண்டு இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட பாரிசால் என்ற புதிய மறைமாவட்டத்தின் துவக்க விழா நிகழ்வுகள், அண்மையில் நடைபெற்றபோது, ஆயர் சுப்ரோத்தா அவர்கள் இவ்வாறு கூறினார்.

பாரிசால் மறைமாவட்டத்தையும் சேர்த்து, தற்போது பங்களாதேஷில் ஏழு மறைமாவட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாரிசால் மறைமாவட்டத்தில் 16,000 கத்தோலிக்கர் உள்ளனர் என்றும் ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

திருத்தூதர் புனித பேதுருவைப் பாதுகாவலராகக் கொண்டுள்ள பாரிசால் மறைமாவட்டத்தையும் சேர்த்து, கடந்த 20 ஆண்டுகளில் பங்களாதேஷ் தலத்திருஅவை, தன் மறைமாவட்டங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது என்று ஆசிய செய்தி மேலும் கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.