2016-04-05 15:04:00

உக்ரைனுக்கென திரட்டப்படும் நிதியை கோர் ஊனும் விநியோகிக்கும்


ஏப்ரல்,05,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விண்ணப்பத்தின்பேரில், உக்ரைன் நாட்டு மக்களின் துயர் துடைப்பதற்கென, ஐரோப்பாவில் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் திரட்டப்படும் நிதியை, திருத்தந்தையின் பிறரன்பு அலுவலகமான கோர் ஊனும் திருப்பீட அவை விநியோகிக்கவுள்ளது.

ஐரோப்பாவிலுள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும், ஏப்ரல் 24, ஞாயிறன்று உக்ரைனுக்கென நிதி திரட்டப்படும்.

உக்ரைன் அரசுப் படைகளுக்கும், இரஷ்யாவுக்கு ஆதரவான பிரிவினைவாதப் படையினருக்கும் இடையே, அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையினால், உக்ரைன் மக்கள் பெருமளவில் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

உக்ரைன் நாட்டில், 2014ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கிய இச்சண்டையில் ஒன்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 17 இலட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர் மற்றும் 15 இலட்சம் பேர் பசியால் வாடுகின்றனர். மேலும், ஏறக்குறைய மூன்று இலட்சம் பேருக்கு, உடனடி உணவும், உணவுப் பாதுகாப்பும் தேவைப்படுகின்றன என்று, ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு கூறியுள்ளது.

13 இலட்சம் பேர், குடிதண்ணீர், எரிவாயு மற்றும் மின்சாரமின்றி கடுமையாய்த் துன்புறுகின்றனர் என்றும் ஐ.நா. கூறியுள்ளது..

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.