2016-06-13 16:28:00

நுகர்வுத்தன்மை, தினமும் உணவை வீணாக்க நம்மை வளர்க்கின்றது


ஜூன்,13,2016. நம் சமூகங்களில் ஊறிப்போயிருக்கும் நுகர்வுத்தன்மை, அதிகப்படியாகக் கொண்டிருப்பதிலும், ஒவ்வொரு நாளும் உணவு வீணாக்கப்படுவதிலும் நம்மை வளர்க்கின்றது என்றும், ஐ.நா.வின் WFP நிறுவனத்தில் இத்திங்களன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிறரின் துன்பங்களுக்குப் பழக்கப்பட்டவர்களாக, நாம் சிறிது சிறிதாக மாறி வருகிறோம் என்றும், வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் நிலை ஏதோ இயல்பானது என்று நோக்கும் நிலையிலிருந்து நாம் மாற வேண்டும் என்றும் உரையில் கூறினார் திருத்தந்தை.  

குழப்பமான மற்றும் கடினமான சூழல்களில் பணியாற்றியபோது இறந்தவர்களின் நினைவுச் சுவரில் சிறிது நேரம் செபித்ததை நினைவுகூர்ந்த திருத்தந்தை, பசியே இல்லாமல் ஆக்குவதற்காக பணியாற்றியபோது இவர்கள் பலியாகியுள்ளனர் என்றும் கூறினார். சமூகத் தொடர்பு சாதனங்களால் உடனடியாகத் தொடர்பு கொள்ளப்படும் ஓர் உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், புவியியல் தூரங்களும் குறைந்து வருகின்றன, இப்பூமியின் ஒருமுனையில் நடப்பதை மறுமுனையில் உடனடியாகத் தெரிந்து கொள்கின்றோம், பல துன்ப உருவங்களைப் பார்க்கின்றோம், ஆனால் அவை நம் நெஞ்சைத் தொடுவதில்லை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐ.நா.வின் WFP நிறுவனத்திற்கு, முதன்முறையாகச் சென்றுள்ள ஒரு திருத்தந்தை என்ற பெயரைப் பெறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிறுவனத்தினரைச் சந்தித்து திரும்பும்போது அந்நிறுவனத்தின் நன்மதிப்புக்குரியவர் புத்தகத்திலும் இஸ்பானியத்தில் கையெழுத்திட்டார்.

“பசியாய் இருக்கும் மக்கள் உள்ளனர், பசியாய் இருக்கும் குழந்தைகள் உள்ளனர், இவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள இயலாமல் இருக்கின்றனர், இவர்கள் முன்னோக்கிச் செல்வதற்கு, உடனடி உதவிகளும், உற்சாகப்படுத்துதலும் அவசியம். நீங்கள் ஆற்றிவரும் அனைத்திற்கும் இதயம்கனிந்த நன்றி. சகோதரத்துவப் பாசத்துடன் பிரான்சிஸ், 13-6-2016” என்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.