2016-06-29 16:42:00

மூவேளை செப உரை : நம் இதயக் கதவுகளைத் தட்டும் புனிதர்கள்


உரோம் நகரின் பாதுகாவலர்களாகிய புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் திருவிழாவையொட்டி, இத்தாலியில், உரோம் நகர் மட்டும் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகம் திருப்பயணிகளாலும், உரோம் நகர் மக்களாலும் நிறைந்திருக்க, புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் மறைப்பணி குறித்து தன் மூவேளை செப உரையிலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோமையில் திருஅவையை நிறுவிய புனிதர்கள் பேதுருவும் பவுலும், இரு பெரும் தூண்களாக, இரு பெரும் ஒளிவிளக்குகளாக வானத்தில் மட்டுமல்ல, மக்களனைவரின் இதயங்களிலும் உள்ளனர். புனித பூமியிலிருந்து உரோம் நகருக்கு நற்செய்தி அறிவிக்கவந்த இவ்விருவரும் பல்வேறு வகைகளில் ஒருவருக்கொருவர் வித்தியாசப்பட்டவர்கள். ஒருவர் எளிமையான மீனவர் என்றால், மற்றவரோ, ஆசிரியர் மற்றும் மறைவல்லுனர். இன்று உரோம் நகர் கிறிஸ்துவை அறிந்திருப்பதற்கும், ஆன்மீகப் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய கூறாக கிறிஸ்தவ விசுவாசம் இருப்பதற்கும், இன்றளவும் கிறிஸ்தவ விசுவாசம் உயிர்துடிப்புடையதாக செயல்படுவதற்கும், அண்மை கிழக்கு நாடுகளின் இவ்விரு புதல்வர்களே காரணம். கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பினால், தங்கள் சொந்த நாட்டை விட்டு வந்து,  நற்செய்தி அறிவிப்பின் முன்னோடிகளாகி, விசுவாசம் மற்றும் பிறரன்பின் பணியை தங்கள் மறைசாட்சிய மரணம் வழியாக நிறைவுச் செய்தனர்.

இன்றும் இயேசுவின் அமைதி, ஆறுதல் மற்றும் இரக்கம் நிறைந்த அன்பை நமக்குக் கொணர விரும்பும் இப்புனிதர்கள், நம் இதயக் கதவுகளைத் தட்டி நிற்கிறார்கள். நாம் மகிழ்ச்சிநிறை கிறிஸ்தவர்களாகவும், நற்செய்தியின் சாட்சிகளாகவும் விளங்க, இவ்விரு புனிதர்களும் உதவுவார்களாக. இன்று பாலியம் பெற்றுள்ள பேராயர்களுக்கும், அவர்களுடன் வந்துள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். முதுபெரும் தந்தை பர்த்தலோமேயுவின் பிரதிநிதிகள் குழுவுக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் வெளியிடுகிறேன், என தன் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய்க்கிழமை மாலையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக செபிப்பதாக உறுதி கூறி, அனைவரின் செபத்திற்கும் அழைப்பு விடுத்தார்.

மேலும், தொழில்துறை முதலீடுகள் சமூக நீதியுடன் கூடிய பொறுப்புணர்வில் இடம்பெறவேண்டும் என்ற மையக்கருத்துடன், உரோம் நகரில் அண்மையில் நடைபெற்ற உலகக் கருத்தரங்கு குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து முதலீடுகளும், உலகில் ஏழ்மையை அகற்றுவதற்கு உதவுவதாக இருக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார். மூவேளை செப உரையின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.