2016-07-23 14:42:00

பொதுக்காலம் - 17ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


ஆசைகள், அச்சங்கள், ஏக்கங்கள், கனவுகள், திட்டங்கள், இவை அனைத்தும், மனிதராய்ப் பிறந்த நம் அனைவரின் வாழ்க்கையோடு கலந்துவிட்ட உண்மைகள். மத நம்பிக்கை கொண்டவர்கள், இவற்றை, இறைவனிடம் விண்ணப்பங்களாக அனுப்ப முயல்வர். இந்த விண்ணப்பங்களை நாம் பொதுவாக செபங்கள் என்று அழைக்கிறோம். செபிப்பது, அனைவருக்கும், இயல்பான, எளிதான அனுபவம் அல்ல. இதில் போராட்டங்கள் பல நிகழும். குறிப்பாக, நாம் எழுப்பும் விண்ணப்பங்களுக்கு எதிர்பார்த்த பதில்கள் கிடைக்காதபோது, பல்வேறு கேள்விகள் நம்மைச் சூழும். ஏன் செபிப்பது? எதற்காக செபிப்பது? எப்போது, எங்கே, எப்படி செபிப்பது?... என்ற கேள்விகள் நம்மில் எழுகின்றன. செபத்தைப் பற்றிய கேள்விகளுக்கு, குழந்தைகள், தங்களுக்கே உரிய வழியில் சில பதில்கள் தருவதை நாம் காணமுடியும்.

ஒரு தாய், தன் குழந்தைகளுடன் உணவு விடுதிக்குச் சென்றார். சாப்பிடும் முன் அவர்களது ஆறு வயது சிறுவன், தான் செபிக்க விரும்புவதாகச் சொன்னான். பின் கண்களை மூடி, செபத்தை ஆரம்பித்தான். "இறைவா, நீர் நல்லவர், உம்மால் எல்லாம் செய்யமுடியும். நீர் எங்களுக்குத் தரப்போகும் உணவுக்காக நன்றி. உணவுக்குப் பின் அம்மா வாங்கித் தரப்போகும் ஐஸ் க்ரீமுக்கு இன்னும் அதிக நன்றி... ஆமென்" என்று செபித்து முடித்தான். ஐஸ் க்ரீம் கிடைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில், அவன் இந்த செபத்தை கொஞ்சம் சப்தமாகவே சொன்னதால், அந்த உணவு விடுதியில் மற்ற மேசைகளில் அமர்ந்திருந்தவர்களும் சிறுவனின் செபத்தைக் கேட்டு சிரித்தனர்.

அடுத்த மேசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு முதியவர், "ஹும்... இந்த காலத்துப் பிள்ளைங்களுக்கு, செபம் சொல்லக்கூடத் தெரியல. கடவுளிடம் ஐஸ் க்ரீம் கேட்டு ஒரு செபமா?" என்று உரத்தக் குரலில் சலித்துக்கொண்டார். இதைக் கேட்டதும், செபம் சொன்னக் சிறுவனின் முகம் வாடியது. "அம்மா, நான் சொன்ன செபம் தப்பாம்மா?" என்று கண்களில் நீர் மல்கக் கேட்டான். அம்மா அவனை அணைத்து, "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை" என்று தேற்ற முயன்றார்.

மற்றொரு மேசையிலிருந்து இன்னொரு வயதானப் பெண்மணி அந்தக் குழந்தையிடம் வந்து, கண்களைச் சிமிட்டி, "நான் கேட்ட செபங்களிலேயே இதுதான் ரொம்ப நல்ல செபம்" என்றார். பின்னர், தன் குரலைத் தாழ்த்தி, அச்சிறுவனிடம், "பாவம், அந்தத் தாத்தா. அவர் கடவுளிடம் இதுவரை ஐஸ் க்ரீம் கேட்டதேயில்லை என்று நினைக்கிறேன். அப்பப்ப கடவுளிடம் ஐஸ் க்ரீம் கேட்டு வாங்கி சாப்பிடுவது, மனசுக்கு ரொம்ப நல்லது" என்று சொல்லிச் சென்றார்.

சிறுவன் முகம் மலர்ந்தான். தன் உணவை முடித்தான். அவன் வேண்டிக் கொண்டதைப் போலவே, உணவு முடிந்ததும், அம்மா ஐஸ் க்ரீம் வாங்கித் தந்தார். சிறுவன் அந்த ஐஸ் க்ரீம் கிண்ணத்தை வாங்கியதும், தன் செபத்தைக் குறை கூறிய அந்தத் தாத்தா இருந்த மேசைக்கு எடுத்துச் சென்றான். பெரிய புன்முறுவலுடன், "தாத்தா, இது உங்களுக்கு. இதைச் சாப்பிட்டால், மனசுக்கு நல்லது" என்று சொல்லி, தாத்தாவுக்கு முன் ஐஸ் க்ரீமை வைத்துவிட்டுத் திரும்பிவந்தான். அங்கிருந்தவர்கள் எல்லாரும் கைதட்டி மகிழ்ந்தனர்.

எதைப்பற்றியும் செபிக்கலாம், கடவுளிடம் எதையும் கேட்கலாம் என்று சொல்லித் தருவதற்கு, குழந்தைகள் சிறந்த ஆசிரியர்கள் என்பதை மறுக்கமுடியாது. ஐஸ் க்ரீம் வேண்டும் என்ற ‘சில்லறை’த்தனமான வேண்டுதல்களையும் கேட்கலாம்; உலகில் நீதியும், அமைதியும் நிலவவேண்டும் என்ற உன்னதமான வேண்டுதல்களையும் கேட்கலாம். கேட்பது, சில்லறைத்தனமானதா, அல்லது, உன்னதமானதா என்பதை அந்த விண்ணப்பத்தை எழுப்பும் உள்ளம்தான் தீர்மானிக்க வேண்டும்.

செபிக்கக் கற்றுத்தாருங்கள் என்று தன்னை அணுகிய சீடருக்கு, செபத்தைப்பற்றிய நீண்டதொரு இறையியல் விளக்கத்தை இயேசு சொல்லித் தரவில்லை. அவர் சொல்லித் தந்ததெல்லாம் ஒரு செபம், ஒரு கதை, ஒரு நம்பிக்கைக் கூற்று. இயேசு சொல்லித் தந்த ஒரே செபமான 'பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே' என்ற செபம், இன்றைய நற்செய்தியாக (லூக்கா 11: 1-13) நம்மை வந்தடைந்துள்ளது. இச்செபத்தைக் கொஞ்சம் ஆய்வு செய்தால், ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளலாம். கடவுளின் அரசு வரவேண்டும் என்ற உன்னதமான கனவுடன் ஆரம்பமாகும் இச்செபத்தில், எங்களுக்கு உணவைத் தாரும், எங்கள் குற்றங்களை மன்னித்தருளும், மன்னிப்பது எப்படி என்று சொல்லித் தாரும், தீமைகளிலிருந்து காத்தருளும்... என்று, இயேசு சொல்லித்தரும் பல விண்ணப்பங்கள், வாழ்க்கைக்குத் தேவையான, மிக, மிக எளிமையான, விண்ணப்பங்கள். எளிமையையும், உன்னதத்தையும் இணைத்து செபிக்க, நமக்கு குழந்தை மனம் தேவை.

இன்றைய முதல் வாசகம் (தொடக்க நூல் 18: 20-32) செபத்தின் வேறு சில அம்சங்களை உணர்த்துகிறது. செபம் என்பது, கடவுளுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல். சில வேளைகளில், இந்த உரையாடல், உரசலாகி, உஷ்ணமாகி, வாக்குவாதமாகவும் மாறும். சோதோம் நகரைக் காப்பாற்ற, ஆபிரகாம், இறைவனுடன் பேரம் பேசும் இந்த முயற்சி, ஒரு செபம். 50 நீதிமான்கள் இருந்தால் இந்த நகரைக் காப்பாற்றுவீர்களா? என்று ஆரம்பித்து, 45, 40 பேர் என்று படிப்படியாகக் குறைத்து, இறுதியில் 10 பேர் என்ற அளவுக்கு இறைவனை இழுத்து வருகிறார், ஆபிரகாம். சந்தையில் நடக்கும் பேரம் போல இது தெரிந்தாலும், ஒரு நகரைக் காப்பாற்றவேண்டும் என்ற ஆபிரகாமின் ஆதங்கம், இதை ஒரு செபமாக மாற்றுகிறது.

நல்லதொன்று நடக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், ஆபிரகாம் நச்சரிக்கிறார். இறைவனும், பொறுமையாய், அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கிறார். இந்தப் பேரம் பேசும் போட்டியில், யார் வென்றது, யார் பெரியவர், கடவுளா, ஆபிரகாமா? என்ற கேள்விகளெல்லாம் அர்த்தமற்றவை. நல்லது நடக்கவேண்டுமென மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும், அவை, செப முயற்சிகளாய் இருந்தாலும் சரி, பிற முயற்சிகளாய் இருந்தாலும் சரி, அந்த நல்லெண்ணமே அம்முயற்சிகளைச் செபமாக மாற்றும் வலிமை பெற்றவை. தன்னை மையப்படுத்தாமல், மற்றவர்களை மையப்படுத்தி ஆபிரகாம் மேற்கொள்ளும் இந்த செபத்தை, பரிந்துரை செபம் (Intercessory Prayer) என்றழைக்கிறோம்.

நீதிமான்களை முன்னிறுத்தி ஆபிரகாம் இப்பரிந்துரை செபத்தை மேற்கொள்வது, மேலும் ஓர் உண்மையை நமக்கு உணர்த்துகிறது. தீமைகளை இவ்வுலகில் கட்டவிழ்த்துவிடும் சக்திகள் வெற்றிபெறுவதுபோல் தோன்றினாலும், அவற்றை முறியடிக்க, ஒரு சில நீதிமான்களின் நன்மைத்தனம் போதும் என்ற நம்பிக்கையை, ஆபிரகாமின் பரிந்துரை செபம் நமக்கு உணர்த்துகிறது.

பரிந்துரை செபம், இயேசு கூறும் உவமையிலும் இடம் பெறுகிறது. நள்ளிரவில் உதவிகேட்டு வந்த நண்பர், தன்னுடைய பசியைத் தீர்க்க தன் நண்பர் வீட்டின் கதவைத் தட்டவில்லை. மாறாக, தன்னை நம்பி வந்த மற்றொரு நண்பரின் பசியைப் போக்கவே அந்த அகால நேரத்தில், அடுத்தவர் வீட்டுக் கதவைத் தட்டினார்.

இந்த உவமைக்கு முன்னர் இயேசு சொல்லித் தந்த அந்த அற்புத செபத்துடன் இந்த நண்பரின் முயற்சியை இணைத்துச் சிந்திக்கலாம். அந்த அழகிய செபத்தில், 'எங்கள் அனுதின உணவை எங்களுக்குத் தாரும்' என்று வேண்டுகிறோம். 'என்னுடைய உணவை எனக்குத் தாரும்' என்ற தன்னல வேண்டுதல் அல்ல இது. இது ஒரு சமுதாய வேண்டுதல். அந்த வேண்டுதலின் ஓர் எடுத்துக்காட்டாக, தன் நண்பரின் உணவுத் தேவையை நிறைவேற்ற, நள்ளிரவு என்றும் பாராது, உதவி கேட்டுச் செல்லும் ஒருவரை இயேசு தன் உவமையில் சித்திரிக்கிறார்.

நமது சொந்தத் தேவைகளை நிறைவு செய்ய, பிறரிடம் உதவிகேட்டுச் செல்வது கடினம் என்றாலும், நமது தேவை, நம்மை உந்தித் தள்ளும். ஆனால், அடுத்தவர் தேவைக்கென பிறரது உதவியைத் தேடிச் செல்வதற்கு, கூடுதல் முயற்சி தேவை. அதுவும், மூடப்பட்ட கதவு, உதவி தர மறுக்கும் அடுத்த வீட்டுக்காரர் என்ற தடைகளையெல்லாம் தாண்டி, இந்த உதவியைக் கேட்பதற்கு, மிக ஆழமான உறுதி தேவை.

அருளாளர் அன்னை தெரேசா நம் நினைவுக்கு வருகிறார். அவர், பிறரிடம் உதவி கேட்டுச் சென்றதெல்லாம், வறியோரை, நோயுற்றோரை வாழ வைப்பதற்கு. ஒருமுறை அவர் ஒரு கடை முதலாளியிடம் தன் பணிக்கென தர்மம் கேட்டு கையை நீட்டியபோது, அந்த முதலாளி, அன்னையின் கையில் எச்சில் துப்பினார். அன்னை அதை தன் உடையில் துடைத்துவிட்டு, கடை முதலாளியிடம் சொன்னார்: "எனக்கு நீங்கள் தந்த அந்தப் பரிசுக்கு நன்றி. இப்போது, என் மக்களுக்கு ஏதாவது தாருங்கள்" என்று, மீண்டும் அவரிடம் கையேந்தி நின்றாராம். அந்த முதலாளி, இதைக் கண்டு அதிர்ச்சியில் நிலை குலைந்து, மனம் வருந்தியதாகவும், அன்னைக்கு உதவி செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

உலகில், ஒவ்வொரு நாளும், பல கோடி மக்கள் பசியோடு படுத்துறங்கச் செல்கின்றனர். அவர்கள் பசியைப் போக்க நாம் முயற்சிகள் எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அடுத்தவர் பசியைப் போக்க நம்மிடம் ஒன்றும் இல்லாதபோதும், மனம் தளராது மற்றவர் உதவியை நம்மால் நாட முடிந்தால், இறை அரசு இவ்வுலகில் வருவது உறுதி.

உலகில் உள்ள ஒவ்வொருவரும் வயிறார உண்ணும் அளவுக்கு இவ்வுலகில் உணவு ஒவ்வொரு நாளும் தயாராகிறது. ஆயினும், அந்த உணவைப் பகிர்ந்துகொள்ள மனமில்லாமல், நம்மில் பலர், மீதமுள்ள உணவை குப்பையில் எறிந்துவிட்டு, கதவுகளை மூடி, படுத்துவிடுகிறோம். குப்பையில் எறியப்படும் உணவு, வறியோரிடமிருந்து திருடப்பட்ட உணவு என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொன்னது, ஓர் எச்சரிக்கையாக இவ்வேளையில் ஒலிக்கிறது.

"எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது..." (லூக்கா 11:7) என்று, காரண காரியங்களோடு, இவ்வுவமையில் சொல்லப்படும் மறுப்பை, பல வழிகளில் நாமும் சொல்லி, நம்மையே சமாதானப்படுத்தி, உறங்கியிருக்கிறோம்.

இந்த வார்த்தைகளில் பொதிந்துள்ள மற்றோர் ஆபத்தையும் இங்கு சிந்திப்பது நல்லது. பகிர்ந்து தரவோ, அடுத்தவருக்கு உதவவோ நமக்கு மனமில்லை என்பதோடு நாம் நிறுத்திவிடாமல், நம் பிள்ளைகளின் முன்னிலையில் இவ்வகையில் நாம் சொல்வது, அவர்களுக்கும் தன்னலப் பாடங்களைச் சொல்லித் தர வாய்ப்பாக அமைகிறது.

பசியைப் போக்கும் முயற்சிகள் எடுக்கும் உலகம் ஒருபுறம். அந்த முயற்சிகளுக்குச் செவி கொடுக்காமல், கதவுகளை மூடும் உலகம் மறுபுறம். உலகை அழிக்கும் ஆயுதங்களுக்கு நாம் செலவிடும் தொகையில் ஆயிரத்தில் ஒரு பகுதியைப் பயன்படுத்தினால் போதும்... உலக மக்களின் பசியை முற்றிலும் துடைக்கலாம்... செல்வம் மிகுந்த நாடுகளில் செல்ல மிருகங்களின் உணவுக்கென செலவாகும் தொகையைக் கொண்டு, பல ஏழை நாடுகளில் மக்களின் பசியை நீக்கலாம்...

இத்தகைய ஒப்புமைப் புள்ளிவிவரங்களை நாம் இன்று முழுவதும் பட்டியலிடமுடியும். அது நமது நோக்கமல்ல. இயேசு கூறும் இந்த உவமையில் நாம் யாராக வாழ்கிறோம்? அடுத்தவர் பசியைப் போக்க முயற்சிகள் மேற்கொள்ளும் மனிதராக வாழ்கிறோமா? பிறர் பசியைப் போக்கும் வாய்ப்புக்கள், நம் வாசல் கதவைத் தட்டினாலும், கதவை மூடிவிட்டு, உறங்கும் மனிதராக வாழ்கிறோமா? என்ற கேள்வியை ஓர் ஆன்மீக ஆய்வாக மேற்கொள்வோம். மூடப்பட்ட கதவுகளுக்குப் பின் நாம் உறங்கிக் கொண்டிருந்தால், மற்றவர் தேவைகளை நிறைவேற்ற, மனக்கதவைத் திறந்து, மனிதராக முயல்வோம்.

இறுதியாக ஓர் எண்ணம்... ஜூலை 25, இத்திங்கள் முதல், ஜூலை 31ம் தேதி முடிய, போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில் 31வது உலக இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. "இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்" (மத். 5:7) என்ற மையக் கருத்துடன் நடைபெறும் இந்த உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், ஜூலை 27ம் தேதி முதல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கலந்துகொள்வார். ஏறத்தாழ 20 இலட்சம் இளையோர் கூடி வருவர் என்று எதிர்பார்க்கப்படும் இந்த இளையோர் கொண்டாட்டங்கள் எவ்வித இடையூறும் இன்றி நிறைவு பெறவேண்டும் என்று மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.