2016-09-05 15:44:00

வாரம் ஓர் அலசல் – புனித அன்னை தெரேசா வழியில் நாமும்


செப்.05,2016. அன்பு நெஞ்சங்களே, செப்டம்பர் 05, இத்திங்கள் கொல்கத்தா அன்னை தெரேசா அவர்கள் திருநாள். அவர் புனிதராக அறிவிக்கப்பட்டதற்கு இந்நாளில், வத்திக்கான் உட்பட, பல  இடங்களில் நன்றி நிகழ்வுகள் நடைபெற்றன. அன்னை தெரேசா அவர்கள் புனிதராக அறிவிக்கப்பட்டதை, இந்தியாவில், ஏறத்தாழ எல்லா  ஊடகங்களும் மகிழ்வோடு வெளியிட்டுள்ளன. இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ்(Kapil Dev) அவர்கள், புனித அன்னை தெரேசா பற்றி வெளியிட்ட ஒரு சான்று செய்தி(சன.30,2011) சில நாள்களுக்கு முன்னர் வாட்ஸப்பில் நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

எல்லாரைப் போலவே நானும், அன்னை தெரேசா பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவரின் வாழ்வின் இறுதிக் காலத்திற்கு முன்புவரை நான் அவரைச் சந்தித்ததே இல்லை. இதற்கு காரணம் ஏன் என்று தெரியவில்லை. சில காரியங்களுக்கு விளக்கங்களே கிடையாது. இந்திய கிரிகெட் அணி, 1983ம் ஆண்டில், உலக கோப்பையை வென்றது. அது மாபெரும் வெற்றியாகும். பின்னர், பாகிஸ்தானியப் பெண் ரோமி(Romi)யைத் திருமணம் செய்துகொண்டு நிறைவான ஒரு வாழ்வைத் தொடங்கினேன். ஆனால், ஒரு குழந்தை வேண்டும் என்ற மகிழ்வு எட்டாக்கனியாகவே இருந்தது. திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு இல்லை. நாங்கள் மகிழ்வாக இருப்பதாக மற்றவர்களுக்குத் தோன்றினாலும், எங்கள் வாழ்வில் வெற்றிடத்தை உருவாக்கிய அந்த ஒரு கூறை யாரும் பார்க்கவில்லை. 1995ம் ஆண்டில், ஏதோ ஒரு வேலையாக கொல்கத்தா சென்றோம். அங்கு, எங்களது நண்பர் ஒருவர், அன்னை தெரேசாவைச் சந்திப்பதற்கு எங்களை அழைத்துச் சென்றார். எனது நண்பர் அன்னையிடம் எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அன்னை மிகவும் சோர்வாகக் காணப்பட்டார்கள். தனது உடல்நலத்தையும் பொருட்படுத்தாது, எங்களைச் சந்தித்தார் அன்னை. அந்தச் சந்திப்பு மிகவும் மகிழ்வைத் தந்தது. எங்களது நண்பர், அன்னை தெரேசாவிடம், எங்கள் வாழ்வின் மகிழ்ச்சியின்மை பற்றி சொன்னார். எங்களை ஆசீர்வதித்த அன்னை தெரேசா அவர்கள், கவலை வேண்டாம், கடவுள் கனிவுள்ளவர் என்றார். அவரின் கருணை இல்லங்கள் ஒன்றிலிருந்து ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்கச் சொல்கிறார் போலும் என்று நான் உணர்ந்தேன். அன்னை அவ்வளவு சாந்தமாக எங்களிடம் பேசினார். கடவுள் இக்காரியத்தைப் பார்த்துக்கொள்வார் என்று தொடர்ந்து சொன்னார்கள். நான் மனதில் அமைதியை உணர்ந்தேன். மாதங்கள் கடந்தன. இந்தச் சந்திப்புப் பற்றி நான் மறந்தேவிட்டேன். திடீரென ஒருநாள் அதே நண்பர் கொல்கத்தாவிலிருந்து என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அன்னை தெரேசா ரோமி பற்றிக் கேட்டார் என்றார். அந்தச் சமயத்தில், ரோமி ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்ததால், நான் மகிழ்வாக இருந்தேன். ரோமி கர்ப்பிணியாக இருப்பது குறித்து நான் அன்னை தெரேசாவிடம் அறிவிக்கவில்லை. ஆயினும், ரோமி கர்ப்பம் தரித்திருப்பது குறித்து அன்னை தெரேசா உணர்ந்ததால்தான், ரோமி பற்றிக் கேட்டிருக்கிறார் என்று நான் உணர்ந்தேன். இந்தக் குழந்தைபேறு, அன்னையின் ஆசீர்வாதத்தால்தான் என்ற உள்ளுணர்வு என்னில் அதிகரித்தது. அது எனக்கு ஒரு தனித்துவமிக்க ஆன்மீக அனுபவமாக இருந்தது. இதற்கு சில மாதங்கள் சென்று எனது மகள் பிறந்தாள். எனது மகளின் பிறப்பிற்குப் பின்னர், நான் அன்னையைச் சந்திக்கச் செல்லவில்லை. ஆயினும், ரோமியின் கர்ப்பம் குறித்து அன்னை தெரேசா அறிந்திருந்தார் என, நான் எனது நண்பர்களிடம் எப்போதும் சொல்கிறேன். 1997ம் ஆண்டில் அன்னை காலமானார். நான் அவரைச் சந்தித்து, அவரின் ஆசீரைப் பெறுவதற்கு, வாய்ப்புக் கிடைத்தற்கு எப்போதும் நன்றியுணர்வோடு உள்ளேன். எனது மகள் அமியா(Amiya) அன்னை தெரேசாவிடமிருந்து கிடைத்த ஒரு கொடை.  இவ்வாறு கபில் தேவ் அவர்கள் சான்று பகிர்ந்திருக்கிறார். பிரேசில் நாட்டில், பொறியியலாளர் Marcilio Haddad Andrino, மூளையில் நோய்க் கிருமிகள் பாதிப்பால், கோமா நிலையில் இறந்துகொண்டிருந்தார். இந்நிலையில், 2008ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி மாலை 6.10 மணிக்கு சக்கர நாற்காலியில் அவசர அறுவைச் சிகிச்சை அறைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அதேநேரம் அவரின் மனைவி, ஆலயம் சென்று, அருளாளர் அன்னை தெரேசாவிடம் செபித்துக்கொண்டிருந்தார். ஆனால் அன்று மாலை 6.40 மணிக்கு அறுவை சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர், அந்த நோயாளி எவ்வித வேதனையும் இன்றி நல்ல விழிப்புநிலையில் உள்ளார் என்று அறிவித்தார். அடுத்த நாள் காலையில் அவர் எவ்வித தலைவலியும் இன்றி முற்றிலும் நலமான நிலையில் இருந்தார். இந்தப் புனிதர் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட Marcilio சொன்னார் – இரக்கமுள்ள இறைவன் எவ்விதப் பாகுபாடுமின்றி, நம் ஒவ்வொருவரையும் நோக்குகிறார், அவரின் இரக்கம், இன்று எனக்கு, நாளை வேறொருவருக்கு என்று.

அன்பர்களே, ஸ்ரீவில்லிபுத்தூர் T. செந்தில் சிகாமணி என்பவர் தினமலரில் இவ்வாறு எழுதியிருக்கிறார் - தன் வாழ்க்கையை அர்ப்பணித்து இந்திய நாட்டில் குடியேறி இப்படியெல்லாம் சேவையாற்றிய ஓர் அந்நிய நாட்டவர்போன்று,  இனிமேல் எவராலும் செய்ய முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.. அவரை நாம் பிறப்பால் பெறாவிட்டாலும், இந்தியாவில் அவர் வாழப் பெற்றதற்காகவே நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அன்னை தெரேசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கியதன் மூலம் தனிச்சிறப்பை திருத்தந்தை பெற்றிருக்கிறார்.

மேலும், குவைத்திலிருந்து பாலாஜி-கயத்தான் என்பவர், சேவை என்றால் ஞாபகத்துக்கு வருவது அன்னை தெரேசா மட்டுமே. அன்னை தெரேசாவிற்கு புனிதர் பட்டம் வழங்கி கௌரவித்தது மிக்க சிறப்புடையது. ஏழ்மையில் உழன்ற கல்கத்தா சேரி மக்களிடம் அன்புகாட்டி, ஒப்பற்ற இரக்க குணம் படைத்தவர்களின் வாழ்க்கை நெறியை வாழ்நாள் முழுக்க கொண்டிருந்தார் அன்னை தெரேசா. அர்ப்பணிப்பு, மனிதநேயம், பிரபஞ்ச அன்பு மற்றும் எல்லையில்லா கருணை ஆகியவற்றின் குணவிளக்காகத் திகழ்ந்தார். வத்திக்கான் அவருக்கு புனிதர் பட்டம் அளித்து இந்தியாவை பெருமைப்படுத்தியது. மேலும் தெரேசா அன்னைக்கு புனிதர் பட்டம் வழங்கிய இந்த நாள் 04 -09 -16 என்பது வரிசையான இயல் எண்களின் வர்க்கங்களால் ஆனது. இந்த வரிசையில் எண்கள் வர அடுத்த நூற்றாண்டு வரைக் காத்திருக்க வேண்டும். இத்தகைய சிறப்பு மிக்க நாளில், நாம் வாழ்வின் எல்லா நலன்களையும் பெற, அன்னை தெரேசா அவர்களிடம் பிரார்த்திப்போம். அவரின் புகழ் பெருகி, மக்களின் மனதில் அன்பின் பெருக்கம் காணப்படட்டும். இந்நிகழ்வை நினைத்து இந்தியாவே பெருமை கொள்கிறது என எழுதியிருக்கிறார். ரமேஷ் குமார் என்பவர், வணங்குகிறேன் தாயே... இவ்வுலகில் அமைதியும் சமாதானமும் நிலவ ஆசீர்வதிப்பீர்களாக என, எழுதியிருக்கிறார். இப்படி அன்பர்களே, பலரும் தங்களின் நன்றியுணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். ஆனால் ஓரிருவர், அன்னை தெரேசா, தனது பணியின் வழியாக மதமாற்றம் செய்தார் என்று குறை சொல்லியிருக்கின்றார்கள். இதனை அறியாமை என்றுதான் சொல்ல வேண்டும். அன்னை அவர்களின் இல்லங்களில் இறப்பவர்கள், அவரவர் மத மரபின்படியே அடக்கம் செய்யப்படுகின்றனர், அதோடு, யாரும் மதம் மாற்றப்பட்டதற்கு ஆதாரங்களே கிடையாது. ICM என்ற அமலமரியின் திருஇதய மறைபோதக சபையில் 12 ஆண்டுகள் தலைவராக இருந்து, கடந்த மாதத்தில் அப்பணியை நிறைவு செய்துள்ள அருள்சகோதரி சவேரியா ராஜம் அவர்கள் சொல்கிறார்....

தன் வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்காகவே தொண்டாற்றி, இறப்புக்கு பிறகும் அற்புதங்கள் படைத்துவரும் அன்னை தெரேசா அவர்களின் நெறிமுறையைத் நாம் பின்பற்றுவோம். வாழ்வின் மிக உன்னத வெளிப்பாடு அன்பு. நாம் வாழ்வதற்கு அச்சாரமும் அது. பிறரன்பில், சிறப்பாக, சமுதாயத்தில் வாய்ப்பிழந்தவரிடம் அன்பு காட்டுவோம். அதுவே புனித அன்னை தெரேசாவுக்கு நாம் சொல்லும் நன்றி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.