2016-09-26 17:21:00

அன்புள்ள இறைவனை அன்புகூர்வதன் வழியாக நற்செய்தி அறிவிப்பு


செப்.26,2016.  அன்புநிறைந்த இறைவனை நாம் அன்புகூர்வதன் வழியாக, நற்செய்தியை பறைசாற்றுவோம் என அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மறைக்கல்வி ஆசிரியர்களுக்கான யூபிலி திருப்பலியை இஞ்ஞாயிறு காலை உரோம் நகர் புனித பேதுரு வளாகத்தில் நிறைவேற்றி, மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாதத்திறமை கொண்டோ, கட்டாயத்தின்பேரிலோ, மதக்கட்டளை என்ற வகையிலோ, நற்செய்தி அறிவிப்பை மேற்கொள்ளாமல், அன்பு நிறைந்த இறவனை அன்புகூர்வதன் வழியாக அறிவிப்போம் என்றார்.

உலகம் முழுவதும் உள்ள மறைக்கல்வி ஆசிரியர்களின் பிரதிநிதியாக, ஏறத்தாழ 15,000 பேர் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கலந்துகொண்ட இத்திருப்பலியில் திருத்தந்தை அவர்கள்,  உயிர்த்த கிறிஸ்துவே நம் நற்செய்தி அறிவிப்பின் மையம் என்றார்.

‘இயேசு உயிர்த்து விட்டார், அவர் நம்மை அன்பு கூர்கிறார், நமக்காக உயிரைக் கொடுத்த அவர் இன்றும் உயிரோடு உள்ளார்,  நமக்காக நம் அருகில் காத்திருக்கிறார்’ என்ற செய்தியை உலகிற்கு வழங்குவதில் மறைக்கல்வி ஆசிரியர்கள் சோர்வடையக் கூடாது எனவும் விண்ணப்பித்தார், திருத்தந்தை.

இறைவனின் அன்பைக் குறித்து விளக்கும்போது, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகமான ‘ஏழை இலாசரும் பணக்காரரும்' என்ற உவமை குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாராமுகம், உலகப்போக்குக்கு அடிமையாதல், சுயநலம் போன்றவைகளில் இருந்து வெளிவரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.