2016-10-20 15:59:00

அகஸ்டின் கடுந்தவ துறவு சபை பிரதிநிதிகளிடம் திருத்தந்தை


அக்.20,2016. நாம் தகுதியற்றவர்களாய், சிறுமைப்பட்டவர்களாய் இருந்தாலும், இறைவன் நமது பாதுகாப்பும், மகிழ்வுமாக இருக்கிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த புனித அகஸ்டின் கடுந்தவ துறவு சபையின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

புனித அகஸ்டின் கடுந்தவ துறவு சபையின் 55வது பொது பேரவையில் பங்கேற்றுவரும் 60க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இந்தப் பேரவைக்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, "உமது பெரும் கருணையே எங்கள் நம்பிக்கை. நீர் விரும்பியதைக் கட்டளையிடும்" என்ற விருதுவாக்கை நினைவுகூர்ந்தார்.

"ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்" (யோவான் 13:34) என்று இயேசு தன் சீடர்களிடம் கூறியதே, இறைவன் நமக்கு எப்போதும் விடுக்கும் கட்டளை என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரன்பு என்ற கட்டளையை நாம் வரலாற்றின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புரிந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

நாம் இறைவனை நம் வாழ்வின் மையமாக்கும்போது, அனைத்தும் சாத்தியமாகிறது என்று எடுத்துரைத்தத் திருத்தந்தை, நாம் ஒருவருக்கொருவர் வழங்கப்பட்டுள்ள மதிப்பு மிக்க பரிசுப்பொருள்கள் என்பதை முழுமையாக உணரவேண்டும் என்று, பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.