2017-01-05 16:07:00

பிளவுற்றிருக்கும் பிரித்தானிய மக்கள் ஒன்றிணைய அழைப்பு


சன.05,2017. Brexit காரணமாக பிளவுபட்டு நிற்கும் பிரித்தானிய மக்கள், தங்கள் வேறுபாடுகளைத் தாண்டி, ஒப்புரவை வளர்க்க வேண்டுமென்று, ஆங்கிலிக்கன் சபையின் தலைவரும், Canterbury பேராயருமான ஜஸ்டின் வெல்பி அவர்கள், தன் புத்தாண்டு செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற எடுக்கப்பட்ட Brexit முடிவு, பிரித்தானிய மக்களை ஆழமாகப் பிரித்துள்ளது என்றாலும், நம் கிறிஸ்தவ பாரம்பரிய வேர்களை, மீண்டும் தேடிச்சென்றால், அங்கு, ஒப்புரவையும், சமாதானத்தையும் நாம் கண்டுணர முடியும் என்று, பேராயர் வெல்பி அவர்கள் பிபிசி தொலைக்காட்சியில் அளித்த புத்தாண்டு செய்தியில் கூறியுள்ளார்.

நம்மிடையே நிலவும் வேறுபாடுகளைக் களைவதாலும், அன்னியரை வரவேற்பதாலும், நம்பிக்கை நிறைந்த ஒரு கிறிஸ்தவக் கலாச்சாரத்தை அடுத்தத் தலைமுறைக்கு நம்மால் விட்டுச் செல்ல முடியும் என்று, பேராயர் வெல்பி அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து, பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்த Sabir Zazai என்ற இளையவர், தற்போது, புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேற்றத்தாரர் மையம் ஒன்றின் இயக்குநராகப் பணியாற்றி, பலருக்கு உதவிகள் செய்து வருவதை, தன் உரையில் எடுத்துக்காட்டாகக் கூறிய பேராயர் வெல்பி அவர்கள், நாட்டுக்குள் தஞ்சம் கோரி வரும் அன்னியர்கள், நமக்குக் கிடைத்த செல்வம் என்று, தன் புத்தாண்டு செய்தியில் வலியுறுத்திக் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.