2017-04-26 15:56:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : திருத்தூதர்கள் காலம் பாகம் 14


ஏப்.26,2017. பாஸ்கா விழாவன்று இயேசு எருசலேமில் இறுதி இராவுணவை தம் சீடர்களுடன் அருந்தினார். பின்னர் இயேசு தம் சீடர்களோடு கெதரோன் என்னும் நீரோடையைக் கடந்து சென்றார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடர்களோடு இயேசு அதில் நுழைந்தார். யூதாசு இஸ்காரியோத்து, படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான். சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அங்கிருந்த நிலையைக் கண்டு, அவர் அதை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டினார். அப்பணியாளரின் பெயர் மால்கு. இயேசு பேதுருவிடம், “வாளை உறையில் போடு. தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனோ?” என்றார். இயேசுவுக்குத் துன்பம் என்றவுடன், திருத்தூதர் பேதுரு கொதித்தெழுந்து இவ்வாறு செய்தார் என நற்செய்தியில் வாசிக்கிறோம். பின்னர், அவர்கள் இயேசுவைக் கைதுசெய்து இழுத்துச் சென்று தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டு போனார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார்.

வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார். அப்போது பணிப்பெண் ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து, “இவனும் அவனோடு இருந்தவன்” என்றார். அவரோ, “அம்மா, அவரை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்தார். சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், “நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்” என்றார். பேதுரு, “இல்லையப்பா” என்றார். ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்குப் பின்பு மற்றொருவர், “உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்; இவனும் கலிலேயன்தான்”என்று வலியுறுத்திக் கூறினார். பேதுருவோ, “நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது” என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று. ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்: “இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்”என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

திருத்தூதர் பேதுரு, திருஅவையை நிறுவி அதை வழிநடத்தியவர். இயேசுவின் இறப்புக்குப் பின், யூதத் தலைவர்களுக்கு அஞ்சி சீடர்கள் பூட்டிய அறைக்குள் முடங்கிக் கிடந்தனர். பெந்தக்கோஸ்து நாளில் தூய ஆவியாரைப் பெற்ற பின் எல்லாரும் உள்ளத்தில் உறுதி பெற்றார்கள். அந்நாளில், திருத்தூதர்கள் சார்பில் முதலில் பேசியவர் பேதுருவே. ஆனால் இவரே, பகைவர்களுக்குப் பயந்து இயேசுவை அறியேன் என மறுதலித்தவர். கடவுள், தவறு செய்பவர்களை தம் பணிக்கெனப் பயன்படுத்துகிறார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோரிடம் கூறியுள்ளது போன்று, எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து நடக்க வேண்டும், மனம் தளர்ந்து போகாமல் துணிந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். நம் தீர்மானங்கள் குறையுள்ளதாய் இருந்தாலும், உண்மையிலேயே மனம் வருந்துகின்றவர்களாய் நாம் இருந்தால், மாபெரும் செயல்களுக்கு கடவுள் நம்மைப் பயன்படுத்துவார். திருத்தூதர் பேதுரு இயேசுவை மறுதலித்தாலும், தனது தவறை எண்ணி மனம் நொந்து அழுதார் என நற்செய்தியில் வாசிக்கிறோம். திருத்தூதர் பேதுரு அந்தக் குற்ற உணர்விலே மூழ்கிக் கிடக்கவில்லை. அதிலிருந்து மீண்டெழுந்தார். அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் முன்பாக துணிந்து இயேசுவைப் பற்றிப் பேசினார். இயேசுவின் பெயரால் அற்புதங்கள் பல நிகழ்த்தினார். 

திருத்தூதர் பேதுருவிடம் விளங்கிய மனம் வருந்தல், அதற்குப் பின்னர் அவரிடம் காணப்பட்ட துணிச்சல், விசுவாசப் பற்றுறுதி நாம் பின்பற்ற வேண்டியவை. கடவுள் நம்மைப் பயன்படுத்துவதற்கு நாம் திறமையானவர்களாக, தவறுகளே செய்யாதவர்களாக இருக்க வேண்டுமென்பதில்லை. கடவுள் அழைப்புக்கு முழு மனதோடு ஆம் என்று சொன்னாலே போதுமானது. அன்று எருசலேமில், பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள்; அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பதையும் இறந்தோர் இயேசுவின் மூலம் உயிர்த்தெழுவர் என்று அறிவித்ததையும் கண்டு எரிச்சலடைந்து, அவர்களைக் கைது செய்தார்கள்; ஏற்கனவே மாலையாகிவிட்டதால் மறுநாள்வரை காவலில் வைத்தார்கள். மறுநாள் தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் எருசலேமில் ஒன்று கூடினார்கள். அவர்கள் திருத்தூதர்களை நடுவில் நிறுத்தி, “நீங்கள் எந்த வல்லமையால், அல்லது எந்தப் பெயரால் இதனைச் செய்தீர்கள்?” என்று வினவினார்கள். அப்பொழுது பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவர்களிடம் பேசியதைக் கண்டு வியப்படைந்தார்கள். திருத்தூதர்களால் நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை. மாறாக, “இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது” என்று, அவர்கள் பேதுருவிடமும் யோவானிடமும் கண்டிப்பாகக் கட்டளையிட்டனர்..

அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, “உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்றனர். அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர். ஆம். உள்ளத்தில் தூய்மை இருந்தால், உண்மையை உரக்கப் பேசுவதற்கு அஞ்சத் தேவையில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.