2017-10-18 16:01:00

திருத்தந்தையின் மூன்று கொடைகளுக்கு மியான்மார் ஆயர்கள் நன்றி


அக்.18,2017. திருப்பீடத்திற்கும், மியான்மார் நாட்டிற்கும் இடையே தூதரக உறவை ஏற்படுத்தியது, மியான்மாருக்கு புதிய திருப்பீட தூதரகத்தை உருவாக்கி, திருப்பீட தூதரை நியமித்தது, மியான்மாருக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வது ஆகிய திருத்தந்தையின் மூன்று கொடைகளுக்கு, மியான்மார் ஆயர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மியான்மாரின் முதல் திருப்பீட தூதர் பேராயர் Paul Tschang In-Nam அவர்களுக்கு வரவேற்பளிக்கும் விதத்தில், இஞ்ஞாயிறன்று யாங்கூன் அமலமரி பேராலயத்தில், நிறைவேற்றப்பட்ட திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டிற்கு அளித்துள்ள மூன்று கொடைகளுக்கு, மியான்மார் ஆயர்கள் நன்றி தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கான அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் பொதுநிலை விசுவாசிகள் பங்குகொண்ட இத்திருப்பலியில், மியான்மாரின் தேசிய அமைதிக்கும் ஒப்புரவுக்கும் கத்தோலிக்கர் உழைக்குமாறு அழைப்பு விடுத்தார், திருப்பீட தூதர் பேராயர் Paul Tschang In-Nam.

மேலும், இத்திருப்பலியில் மறையுரையாற்றிய, மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், மியான்மார் திருஅவைக்கும், நாட்டினர் எல்லாருக்கும் இது முக்கியமான நேரம் என்று கூறினார்.

வருகிற நவம்பர் 27ம் தேதி முதல், 30ம் தேதி வரை, மியான்மாரின் யாங்கூன், Nay Pyi Taw ஆகிய இரு நகரங்களில் திருத்தூதுப்பயண நிகழ்வுகளை நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.