2018-05-31 14:59:00

இமயமாகும் இளமை : சிறுவனைக் காப்பாற்றிய ஸ்பைடர்மேன் இளைஞர்


ஒருவர், சரியான ஆவணங்கள் இல்லாமல் இருந்து, அதேநேரம் ப்ரெஞ்ச் குடியுரிமை பெற விரும்பினால், ஓர் எளிமையான வழி உள்ளது. மே 29, இச்செவ்வாயன்று, பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாமுது கசாமா (Mamoudou Gassama) என்ற 29 வயது ஆப்ரிக்க இளைஞர் போன்று, ஏதாவது ஓர் அசாதாரண செயல் செய்தாலே போதுமானது. உண்மையில், இது பிரான்ஸ் நாட்டு குடியுரிமை சட்டத்தில் உள்ளது. குடியுரிமை சட்டம் 21,19ல், வெளிநாட்டவர் ஒருவர், பிரான்ஸ் நாட்டுக்காக, அசாதாரண, சிறப்பான சேவையை ஆற்றினால், அம்மனிதர் ப்ரெஞ்ச் குடிமகனாக மாறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நகர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், நான்கு வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்து, பால்கனியைப் பிடித்து தொங்கிக்கொண்டிருந்தான். இதைக் கவனித்த, மாலி நாட்டைச் சேர்ந்த கசாமா என்ற புலம்பெயர்ந்த இளைஞர், 'ஸ்பைடர்மேன்' போல, கீழிருந்து ஒவ்வொரு மாடியாக ஏறி, தொங்கிக்கொண்டிருந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்றினார். அதற்குப்பின்தான், தீயணைப்பு படையினர் அந்த இடத்துக்கு வந்தனர். அப்பகுதி மக்கள், இளைஞர் கசாமாவைப் பாராட்டினர். செய்தியறிந்த பிரான்ஸ் நாட்டு அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) அவர்கள், கசாமாவை அழைத்து, அவருக்கு பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை வழங்கினார். அத்துடன், கசாமாவுக்கு தீயணைப்பு துறையில் வேலையும் வழங்கினார், அரசுத்தலைவர் மக்ரோன். கடும் வெயிலில், தொங்கிக்கொண்டிருந்த குழந்தையைக் காப்பாற்றாமல் வெறுமனே பார்த்து கொண்டிருந்திருந்தால், கசாமா, நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் பட்டியலில் இடம்பெற்றிருப்பார் என்பதை, இச்சந்திப்பில், அரசுத்தலைவர் மக்ரோன் அவர்கள், சகாமாவிடம் தெளிவாகச் சொன்னார் என செய்திகள் கூறுகின்றன. குழந்தையைக் காப்பாற்றியது குறித்து இளைஞர் கசாமா கூறுகையில், ''குழந்தை தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்ததும், சிறிதும் சிந்திக்காமல், ஒவ்வொரு மாடியாக வேகமாக ஏறி காப்பாற்றினேன்'' என்றார். ஆப்ரிக்காவின் மாலி நாட்டைச் சேர்ந்த இளைஞர் கசாமா அவர்கள், சரியான ஆவணங்கள் இன்றி, மத்திய தரைக்கடல் வழியாக, கடும் துன்பங்களை எதிர்கொண்டு, ஆபத்தான நீண்ட படகுப் பயணம் மேற்கொண்டு, பாரிசில் புலம்பெயர்ந்தவராக வாழ்ந்து வந்தார்.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.